2016-11-11 15:52:00

கிறிஸ்தவ அன்பு இரக்கச் செயல்களில் வெளிப்பட வேண்டும்


நவ.11,2016. கிறிஸ்தவரின் அன்பு, உண்மையானதாகவும், அன்றாட வாழ்வின் நடைமுறைகளில் தெளிவாகத் தெரிவதாகவும் இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, திருப்பலி  மறையுரையில் கூறினார்.

கிறிஸ்தவ அன்பின் இயல்பு பற்றிக் கூறும், தூய யோவான் எழுதிய இரண்டாவது திருமுகப் பகுதியை மையமாக வைத்து, இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், மறையுரை வழங்கிய திருத்தந்தை, இக்காலத்தில், அன்பு என்ற சொல், பல்வேறு முறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றி விளக்கினார்.

அன்பு பற்றிய கருத்தியல்கள் மற்றும் அறிவுசார்ந்த கோட்பாடுகள், திருஅவையைப் பாழ்படுத்துகின்ற என்று எச்சரித்த திருத்தந்தை, மனித உரு எடுத்த இறைவார்த்தையே, கிறிஸ்தவ அன்புக்கு, அளவுகோல் என்றும், இயேசுவின் மனிதப் பிறப்பை மறுக்கின்ற அல்லது அதை ஏற்காதவர், கிறிஸ்துவுக்கு எதிரி என்றும் கூறினார்.

இயேசு அன்புகூர்ந்ததுபோல், இயேசு கற்றுக்கொடுத்ததுபோல், அன்பு செலுத்துவதே கிறிஸ்தவ அன்பு என்றும், இயேசு அன்புகூர்ந்ததுபோல் அன்பு கூர்வது என்பது, தன்னலத்திலிருந்து விடுபட்டு, பிறருக்குத் தொண்டு புரிந்துகொண்டே இருப்பதாகும் என்றும், திருத்தந்தை, மறையுரையில் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவரின் அன்பு, அன்றாட வாழ்வில், இரக்கச் செயல்களில் தெளிவாக வெளிப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஏழைகளே திருஅவையின் சொத்துக்கள், ஏனென்றால், அவர்கள், துன்புறும் கிறிஸ்துவின் சதையாக இருக்கின்றனர் என்று புனித லாரன்ஸ் கூறியதை, மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு உண்மையானதாக இருந்தால், அது இரக்கப் பணிகளில் விளங்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.