2016-11-11 15:49:00

17 புதிய கர்தினால்களுக்கு நவம்பர் 19ல் தொப்பி, மோதிரம்


நவ.11,2016. கடந்த அக்டோபரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவித்த 17 புதிய கர்தினால்கள் திருப்பொழிவு நிகழ்வு, இம்மாதம் 19ம் தேதி, சனிக்கிழமையன்று வத்திக்கானில் நடைபெறும்.

நவம்பர் 19, சனிக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், காலை 11 மணிக்கு நடைபெறும் திருவழிபாட்டில், கர்தினால்களுக்குரிய தொப்பியும், மோதிரமும், அவர்களுக்குரிய சிறப்புப்பெயரும் வழங்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கர்தினால்களை, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், நவம்பர் 19ம் தேதி மாலை 4.30 மணி முதல், 6.30 மணி வரை சந்தித்து வாழ்த்துக் கூறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவிலிருந்து இருவர், மொரீசியஸ், பாப்புவா நியு கினி தீவு நாடுகளிலிருந்து இருவர், ஆப்ரிக்காவிலிருந்து இருவர், ஐரோப்பாவிலிருந்து நால்வர், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மூவர், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து மூவர், சிரியாவின் திருப்பீடத் தூதர் என 17 புதிய கர்தினால்களை, 11 நாடுகளிலிருந்து நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவர்களில் 13 பேர், 80 வயதுக்குட்பட்டவர்கள். மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, பங்களாதேஷ், பாப்புவா நியு கினி, மலேசியா, லெசோத்தோ ஆகிய நாடுகள்,  முதன்முறையாக, கர்தினால் ஒருவரைப் பெறுகின்றன.

பங்களாதேஷின் டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ, மலேசியாவின் கோலாலம்பூர் முன்னாள் பேராயர் அந்தோனி சொத்தெர் ஃபெர்னாண்டஸ் ஆகிய இருவரும் ஆசியர்கள். 

மேலும், கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய, நவம்பர் 20ம் தேதி, புதிய கர்தினால்களுடன் சேர்ந்து, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.