2016-11-10 15:03:00

இது இரக்கத்தின் காலம் : உதவுபவருக்கே கேடு நினைப்பதா!


அது ஓர் அழகிய காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு நீரோடை. அந்தக் காட்டில் வாழ்ந்த ஒரு தேளுக்கு, அந்த நீரோடையைக் கடந்து, அக்கரைக்குப் போக வேண்டியிருந்தது. அதனால், அந்த நீரோடையில் வாழ்ந்த பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் உதவி கேட்டது. இது பொல்லாத தேள், நம்மைக் கொட்டிவிடும் என்று நினைத்து, அவை மறுத்துவிட்டன. பின்னர் ஒரு தவளையிடம் உதவி கேட்டது தேள். தவளை அதற்கு ஒத்துக்கொள்ள, தவளையின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டது தேள். இரண்டும் பயணத்தை ஆரம்பித்தன. பயணம் செய்த சிறிது நேரத்தில், இந்தத் தவளையை ஒருநாளும் கொட்டியதில்லை, கொட்டினால் அது எப்படித் துடிக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டது தேள். தவளையின் முதுகிலும் அது கொட்டியது. தவளை ஒன்றும் பேசாமல் சென்றுகொண்டிருந்தது. இதைக் கவனித்த தேள், தவளையாரே, உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது. தவளையும், எனது முதுகு வளவளப்பானது. அதனால் அந்த இடத்தில் வலியே வருவதில்லை, ஆனால், எனது கழுத்துப் பகுதி மென்மையாக இருக்கும், இதில்தான் எனக்கு, வலிகள், காயங்கள் ஏற்படும் என்று அப்பாவியாகச் சொன்னது. ஓகோ, அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்று, பின் தலைப் பகுதியை அடைந்தது. தேள், கொட்ட வருவதை உணர்ந்த தவளை, தனது தலையை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டது. தேள் நீரோடையில் மூழ்கி இறந்தது.

எவ்வித பலனையும் எதிர்பாராமல், உதவி செய்பவருக்கே தீங்கு நினைத்தால், அத்தீங்கு, அதைச் செய்ய நினைத்தவருக்கே ஆபத்தாக அமையும். எனவே, நமக்கு உதவி செய்பவரை, நம் வாழ்நாளில் என்றுமே மறக்கக் கூடாது. அதோடு, அந்த நபருக்கு எப்பொழுதுமே நன்றியுடையவராக இருப்பதே மனிதப் பண்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.