2016-11-10 16:19:00

அரசுத்தலைவர் ட்ரம்ப்புக்கு அமெரிக்க ஆயர்களின் வாழ்த்து


நவ.10,2016. "அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப் அவர்களுக்கு, இறைவன் நல்ல உடல்நலத்தையும், ஞானத்தையும், உள்ளத்துணிவையும் தருவாராக" என்ற சொற்களை, பாஸ்டன் பேராயர், கர்தினால் Sean O’Malley அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிட்டார்.

மக்களின் நலனை வளர்ப்பது ஒன்றே அரசியலின் முக்கிய நோக்கம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத் தலைவரும், ஏனைய பாராளு மன்ற உறுப்பினர்களும் மனதில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Joseph Kurtz அவர்கள் ஒரு செய்தியாக வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் பிளவுபட்டு நின்ற அமெரிக்க ஐக்கிய நாடு, இனி ஒன்றுபட்டு, மக்களின் நலனை முன்னிறுத்தி செயலாற்றும் என்று தான் நம்புவதாக, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறும் இன்றையச் சூழலில், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் மத சுதந்திரத்திற்கு எதிராக நடைபெறும் முயற்சிகளை, புதியத் தலைவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று பேராயர் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.