2016-11-09 15:59:00

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு வாழ்த்து


நவ.09,2016. "இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பை, இவ்வுலகில், உரையாடல், ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ளுதல், உடன்பிறந்தோரின் கூட்டுறவு ஆகிய வழிகளில், மென்மேலும் வெளிப்படுத்துவோமாக" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள், தங்கள் வாக்குகள் வழியே வெளிப்படுத்தியிருக்கும் முடிவை மதிக்கிறோம் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், செய்தியொன்றை, இப்புதன் காலையில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், 45வது அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அவர்களுக்கு, திருப்பீடத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், புதியத் தலைவரை, இறைவன் வழிநடத்த, தன் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னேற்றம், உலகின் அமைதி ஆகியவற்றை முன்னிறுத்தி, புதிய அரசுத் தலைவர் செயல்பட, இறைவன், அவருக்குத் தேவையான ஒளியைத் தருவாராக என்று, கர்தினால் பரோலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.