2016-11-08 15:19:00

அபூர்வ நோய்களால் துன்புறுவோருடன் திருப்பீடம் ஒருமைப்பாடு


நவ.09,2016. அபூர்வ நோய்களால் துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவும், உலகில் மிகவும் ஒதுக்கப்பட்ட கிராமப்புறங்களில், புறக்கணிக்கப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் நெருக்கடி நிலைகளை உலகினருக்கு உணர்த்தவும் திட்டமிட்டுள்ளது திருப்பீட நலவாழ்வுத் துறை.

“அபூர்வ மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய்களால் துன்புறும் மக்களுக்கு ஆதரவாகப் பணியாற்றுவதில் நலவாழ்வு கலாச்சாரத்தை நோக்கி” என்ற தலைப்பில், நவம்பர் 10, இவ்வியாழனன்று தொடங்கும் பன்னாட்டு கருத்தரங்கு குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த திருப்பீட நலவாழ்வுத் துறை, இவ்வாறு கூறியுள்ளது.

இந்த மூன்று நாள் கருத்தரங்கு பற்றி விளக்கிய, அத்துறையின் செயலர் பேரருள்திரு Jean-Marie Mupendawatu அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டுச் சூழலில் இக்கருத்தரங்கு நடைபெறுகின்றது என்று கூறி, திருஅவை, தனது இரண்டாயிரமாம் ஆண்டு வரலாற்றில், நோயாளருக்கு ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

உலகில், இரண்டாயிரம் பேருக்கு, ஒருவர் வீதம், அதாவது, ஏறக்குறைய நாற்பது கோடிப் பேர் அபூர்வ நோய்களாலும், நூறு கோடிக்கும் மேற்பட்டோர் புறக்கணிக்கப்பட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் சிறார் என்றும் பேரருள்திரு Mupendawatu அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கில், இந்நோயாளருக்குச் சிகிச்சைகளை எவ்வாறு விரிவுபடுத்துவது என்றும், இவர்கள் மாண்புடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் முறைகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் பேரருள்திரு Mupendawatu அவர்கள் கூறினார்.

அபூர்வ மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதால் பொருளாதார ஆதாயங்களை எதிர்பார்க்க முடியாது என்று, ஆய்வு நிறுவனங்கள், அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ள இத்திருப்பீடத் துறை, வெப்பமண்டல பருவநிலையைக் கொண்டிருக்கும் பகுதிகளில் வாழும் ஏழைகளில் பலர் இந்நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்குப் போதிய சுத்தமான குடிநீர், நலவாழ்வு மற்றும் குடியிருப்பு வசதிகள் கிடையாது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.