2016-11-07 15:22:00

திருத்தந்தை: பணத்தின் ஆட்சி மனிதரை கொடுமைக்காரர்களாக்குகிறது


நவ.07,2016. மனிதருக்குப் பணிபுரிவதற்கென உருவாக்கப்பட்ட பணம், இன்று மனிதர்களையே ஆட்டிப்படைப்பது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமுதாயத்தின் ஓரங்களுக்குத் தள்ளப்பட்ட மக்களிடையே பணியாற்றும் பல்வேறு இயக்கங்களின் மூன்றாவது உலகக் கூட்டத்தில் பங்குபெற்றோரை இச்சனிக்கிழமை மாலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சம், சரிநிகரற்றதன்மை, வன்முறை என்ற சாட்டையைச் சுழற்றி ஆட்சி செய்யும் பணத்தின் ஆதிக்கத்தால், இன்றையப் பொருளாதாரமும் சமூக நிலைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு, முடிவே இல்லாத ஓர் இறங்குமுகம் இடம்பெற்று வருவதாக கவலையை வெளியிட்டார்.

நம்மை அச்சுறுத்திச் சுரண்டும் இந்த பணத்தின் ஆட்சி, மனித குலத்தை பலவீனப்படுத்தி, நிலைகுலையச் செய்வதுடன், பிறரின் துன்பங்கள் கண்டும் கவலையடையாதவர்களாக, கொடுமைக்காரர்களாக நாம் மாறுவதற்கே உதவுகின்றது எனக் கூறினார், திருத்தந்தை.

இன்றைய உலகில், மனிதாபிமானம் மிக்க சமூக இயக்கங்கள், புலம்பெயர்ந்தோரிடையிலும், வேலைவாய்ப்பற்றோரிடையிலும் ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் பாராட்டுதல்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இன்றைய குடியரசு முறைகளுக்கு உயிரூட்டும் வழிகளை ஆராய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இன்றைய உலகின் இலஞ்ச ஊழல் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, மற்றவர்களுக்கு பணிவுடன் பணிபுரிய வேண்டிய நம் அழைப்பை உணர்ந்து நாம் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.