2016-11-07 16:03:00

குற்றவாளிகளை நல்மனிதர்களாக மாற்றுவதற்கு சட்டங்கள் உதவ...


நவ.07,2016. சிறைக் கைதிகளின் யூபிலிக் கொண்டாட்டங்கள் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதைக் குறித்து, மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகம் முழுவதும், சிறைக் கைதிகளின் மனித மாண்பு முற்றிலும் மதிக்கப்படும் வகையில்,  சிறைகளின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார்.

தண்டனைகளை வகுக்கும் சட்டங்கள், தண்டிப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், குற்றவாளிகள், சமூகத்திற்குள் மீண்டும் ஒரு நல் அங்கமாக மாறுவதற்கு உதவுவதாக அமைய வேண்டும் என அனைத்து அரசுகளிடமும் தான் விண்ணப்பிப்பதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகின் தட்பவெப்ப நிலை குறித்த பாரீஸ் ஒப்பந்தம் இரு நாட்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது, இயற்கையை மனிதனால் காப்பாற்றமுடியும் என்பதன் எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வொப்பந்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குறித்து இத்திங்கள் துவங்கியுள்ள மொரோக்கோ கருத்தரங்கு வெற்றிபெறவேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.

மேலும், கடந்த நூற்றாண்டில், கடவுள் நம்பிக்கையற்ற நாடென தன்னையே அறிவித்துக்கொண்ட அல்பேனிய அரசால், அந்நாட்டில் கொலைச் செய்யப்பட்ட 38 மறைசாட்சிகள், கடந்த சனிக்கிழமையன்று, அல்பேனியாவில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டதையும் நினைவூட்டிய திருத்தந்தை, அவர்களின் எடுத்துக்காட்டு நமக்கு, துன்ப வேளைகளில் பலத்தை வழங்கி, நம்மில் இரக்கம் மன்னிப்பு, அமைதி என்ற உணர்வுகளை தூண்டட்டும் எனற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.