2016-11-07 16:12:00

இறைவனுக்கென தன்னை மூடி தனிமைப்படுத்தப்பட்ட அறை என்று இல்லை


நவ.07,2016. உரோம் நகரின் மூன்று மேஜர் பசிலிக்காக்களின் புனிதக் கதவுகள், வரும் ஞாயிறன்று மாலை திருப்பலிகளுடன் மூடப்படும் என திருப்பீட வழிபாட்டுத்துறை அறிவித்துள்ளது.

ஞாயிறன்று, அதாவது நவம்பர் 13ம் தேதி இத்தாலிய நேரம் மாலை 5 மணிக்கு திருப்புகழ் மாலை மற்றும் திருப்பலியுடன் புனித பவுல் பசிலிக்காப் பேராலயப் புனிதக் கதவும், அதே நாள் மாலை 5.30 மணி திருப்பலிக்குப் பின் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலயப் புனிதக் கதவும்,  மாலை 6 மணி திருப்பலிக்குப்பின் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயப் புனிதக் கதவும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஞாயிறு, நவம்பர் 20ம் தேதி, சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவு நாளான கிறிஸ்து அரசர் திருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயப் புனிதக் கதவு ஆடம்பரத் திருப்பலியுடன் மூடப்படும்.

இதற்கிடையே, சிறைக் கைதிகளின் சிறப்பு யூபிலி இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவன் நுழையமுடியாதவாறு மூடி தனிமைப்படுத்தப்பட்ட சிறை அறை என்று எதுவுமில்லை, இறை அன்பு எல்லா இடத்தையும் சென்றடைகிறது, இந்த அனபிற்கு ஒவ்வொருவரும் தன்னைத் திறக்கவேண்டும் என நான் செபிக்கிறேன்' என அதில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.