2016-11-05 15:43:00

மலாவி நாட்டில் கர்தினால் ஃபிலோனி


நவ.05,2016. தனியாகச் செபிக்கவும், திருவழிபாடுகளையும், அருளடையாளங்களையும் நிறைவேற்றவும் புனித இடங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு நேரமும், நாம் தூய ஆவியாரின் ஆலயங்களாக மாறுகிறோம் என்று, கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி(Fernando Filoni) அவர்கள் கூறினார்.

ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில், இவ்வியாழனன்று ஐந்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ள, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி அவர்கள், இச்சனிக்கிழமையன்று, மலாவியின், Karongaவில், புதிய பேராலயத்தை அருள்பொழிவு செய்து, ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இறைவன் எங்கெங்கு நம்மை அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம் சென்று, விசுவாசக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கு, தூய ஆவியார் சக்தியைத் தருகிறார் என்றும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.

இறைவனின் அன்பு தேவைப்படுபவர்க்கு, மகிழ்வுடன் சென்று, அதை வழங்குவதற்கு,  தூய ஆவியார், நமக்கு வல்லமை தருகின்றார் என்றும் கூறிய கர்தினால், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம் மற்றும் மன உறுதியோடு, நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுமாறும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

மலாவி நாட்டில், நவம்பர் 3, இவ்வியாழனன்று மேய்ப்புப்பணி பயணத்தைத் தொடங்கிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், நவம்பர் 7, வருகிற திங்களன்று அதனை நிறைவு செய்வார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.