2016-11-05 14:20:00

பொதுக்காலம் 32ம் ஞாயிறு - சிறைப்பட்டோரின் யூபிலி - சிந்தனை


இன்னும் இரு வாரங்களில், அதாவது, நவம்பர் 20, கிறிஸ்து அரசர் விழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவடையும். இரக்கத்தை மையப்படுத்திய இப்புனித ஆண்டு நிறைவுற்றாலும், தொடர்ந்து வரும் நாட்களில், இரக்கம் நம் வாழ்வாகவேண்டும் என்பதை நினைவுறுத்த, யூபிலியின் இறுதி இரு வாரங்களில் வத்திக்கானில் இரு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவைதான், சிறைப்பட்டோரின் யூபிலி, மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் யூபிலி. இவற்றில், சிறைப்பட்டோரின் யூபிலியை இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையமாக்க முயல்வோம்.

இந்தப் புனித ஆண்டைக் கொண்டாட, பல குழுவினர் வெவ்வேறு நாட்களில் வத்திக்கானில் கூடி வந்தனர். ஏப்ரல் மாதம், வளர் இளம் பருவத்தினர், மே மாதம், தியாக்கோன்கள், ஜூன் மாதம் அருள்பணியாளர்கள் மற்றும் நோயுற்றோர், ஜூலை மாதம், போலந்து நாட்டில் உலக இளையோர்... என்று, பல குழுவினர் யூபிலியைக் கொண்டாடியுள்ளனர். செப்டம்பர் 2ம் தேதி முதல், 4ம் தேதி முடிய, இரக்கப்பணியாளர்கள் வத்திக்கானில் யூபிலியைக் கொண்டாடியபோது, இரக்கத்தின் தூதரான அன்னை தெரேசா அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக உயர்த்தியது, இந்த யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக அமைந்தது. அதேபோல், நவம்பர் 5,6 மற்றும் 12, 13 ஆகிய இரு வார இறுதி நாட்களில், மேலும் இரு சிகர நிகழ்வுகளாக, சிறைப்பட்டோரின் யூபிலியும், ஒதுக்கப்பட்டோரின் யூபிலியும் வத்திக்கானில் இடம்பெறுகின்றன.

'யூபிலி' கொண்டாட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும் விடை தேடும்போது, சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அங்கு கூறப்பட்டுள்ளனர். யூபிலி ஆண்டினை, ஆண்டவர் அருள்தரும் ஆண்டென அறிவிக்க தான் வந்திருப்பதாக, இயேசு அறிவித்ததை நாம் லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் வாசிக்கிறோம். "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோர் விடுதலை அடைவது, பார்வையற்றோர் பார்வை பெறுவது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது" (லூக்கா 4:18-19) ஆகியவை, அருள்தரும் ஆண்டில் நிகழவேண்டிய அற்புதமானப் பணிகள் என்று இயேசு அறிவித்தார். இந்தப் பட்டியலில், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லது, (ஒதுக்கப்பட்டோர்) இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.

திருஅவை வரலாற்றில் இதுவரை பல யூபிலி ஆண்டுகள் கொண்டாடப்பட்டுள்ளன. பொதுவாக, அருள்பணியாளர்கள், துறவறத்தார், பக்த சபையினர், இரக்கப் பணியாளர்கள், பொதுநிலையினர் என்று பலர், இந்த யூபிலி விழாக்களைச் சிறப்பித்துள்ளனர். சிறைப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் கூடிவந்து யூபிலியைக் கொண்டாடுவது இதுவே முதல்முறை என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.

இன்று நாம் கொண்டாடும் திருவழிபாட்டு ஆண்டின் 32வது ஞாயிறன்று, உயிர்ப்பையும், மறுவாழ்வையும் மையப்படுத்தி, வழிபாட்டு வாசகங்கள் அமைந்துள்ளன. 'மறுவாழ்வு' என்றதும், இவ்வுலக வாழ்வுக்குப் பின் வரும் மறு உலக வாழ்வையே நாம் பெரும்பாலும் எண்ணிப்பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக, நவம்பர் மாதத்தில், இறந்தோரின் நினைவாக நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளில், 'மறுவாழ்வு' என்ற சிந்தனை நம்மில் ஆழமாகப் பதிகிறது.

'மறுவாழ்வு' என்பதை, மறு உலகில் நாம் பெறவிருக்கும் வாழ்வு என்றுமட்டும் எண்ணிப்பார்க்காமல், இவ்வுலகிலேயே நாம் வாழக்கூடிய மாறுபட்ட வாழ்வாகவும் எண்ணிப்பார்க்கலாம்! எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளாக, தீராத ஒரு நோயினால் துன்புறும் ஒருவர், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை வழியே நலம்பெற்று வாழ்வதை, மறுவாழ்வு என்று கூறுகிறோம். போதைப்பொருளுக்கோ, மதுவுக்கோ அடிமையாகி, பின்னர் அதிலிருந்து விடுபட்டு வாழ்வதையும் நாம் மறுவாழ்வு என்று அழைப்பதில்லையா? அதேபோல், ஏதோ ஒரு சூழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு, தங்கள் வாழ்வை மாற்றி அமைத்துள்ள மனிதர்கள், மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். சிறைப்பட்டோரின் யூபிலி சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, மறுவாழ்வைப் பற்றிச் சிந்திக்க, இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.

சிறைக்கைதிகள் மறுவாழ்வு பெறுவது, அவர்களை மட்டும் சார்ந்ததல்ல, அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும் அவர்களை வாழவைக்க வேண்டும். இதை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் வாசித்த ஓர் உண்மை நிகழ்வு மனதில் நிழலாடுகிறது:

சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்து வந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "பாதர், சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு எனக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

'சிறைப்பட்டோரின் யூபிலி'யைக் கொண்டாட, ஆயிரக்கணக்கான கைதிகள் வத்திக்கானில் கூடுகின்றனர் என்று கேள்விப்பட்டதும், என் மனதில் 'இது ஓர் ஆபத்தான முயற்சி' என்ற எண்ணமே முதலில் தோன்றியது. 'கைதிகள்' என்றதும், கைவிலங்குகள், கம்பிக்கதவுகள், கடினமான இதயங்கள் என்று எனக்குள் நானே உருவாக்கிக்கொண்ட முற்சார்பு எண்ணங்களே, என்னில் இந்த அபாயச் சங்கை அலறவைத்தது. சிறைப்பட்டோர், வத்திக்கானில் யூபிலி கொண்டாடுகின்றனர் என்றதும், அதனை, அருள்நிறைந்த ஒரு வாய்ப்பாக எண்ணிப்பார்க்காமல், ஆபத்தாக எண்ணிப் பார்க்க வைத்தது.

"சிறைப்பட்டோருக்கு விடுதலை வழங்குவதை" தன் பணிவாழ்வின் குறிக்கோள் என்று இயேசு கூறியதை, நானும், ஒரு விருதுவாக்காகக் கூறியுள்ளேன். "சிறையிலிருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று இறுதி தீர்வையில் இயேசு கூறும் வார்த்தைகளையும் தியானித்திருக்கிறேன். இருப்பினும், சிறைப்பட்டோர் மீது நான் கொண்டிருக்கும் தவறான முற்சார்பு எண்ணங்கள் இன்னும் தூய்மைபெற வேண்டும் என்பதை உணர்கிறேன்.

இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை என்னால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையிலிருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, நானாகவே ஒரு விளக்கம் தரும்போது, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப் படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாதபோது, நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது.

உலகின் பல நாடுகளில், சிறையிலிருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர், குற்றமற்றவர்கள் என்பதை நாம் அறிவோம். மீதிப் பாதியில், பல்லாயிரம் கைதிகள், சூழ்நிலை காரணமாக ஒருமுறை தவறு செய்தவர்கள் என்பதையும் நாம் அறிவோம். அதேவேளையில், தெளிவாக, திட்டமிட்டு குற்றம் புரியும் பலரை, எந்தச் சட்டமும் நெருங்காமல் இருப்பதையும், அந்தக் குற்றவாளிகளில் பலர், ஆட்சிப் பீடங்களில் அமர்ந்து, அடுத்தவரை குற்றவாளிகள் என்று அநியாயமாகத் தீர்ப்பு வழங்குவதையும் நாம் வேதனையுடன், வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைத் தீர்மானிக்கும் நீதியிருக்கையில் நாம் அமர்ந்திருந்தால், சிறைப்பட்டோரின் யூபிலியைக் கொண்டாடும் இஞ்ஞாயிறன்று, அந்த இருக்கையைவிட்டு எழுந்து நிற்போம். ஏதோ ஒரு காரணத்தால், அல்லது, காரணம் எதுவுமே இல்லாமல், சிறையில் தள்ளப்பட்டுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு முன் மண்டியிட்டு, அவர்கள் காலடிகளைக் கழுவ முற்படுவோம். அவர்களை ஓரளவு புரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த வழி.

தன் தலைமைப் பணிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்து, இந்தப் பணிவு வழியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அடிக்கடி நினைவுறுத்தி வருகிறார். 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி தன் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை, மார்ச் 28ம் தேதி, புனித வியாழன் மாலை, ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலியை வளர் இளம் கைதிகள் நடுவில் நிறைவேற்றினார். அவ்வேளையில், 12 இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார், திருத்தந்தை. காலடிகள் கழுவப்பெற்ற கைதிகளில், இருவர் இஸ்லாமியர், இருவர் இளம் பெண்கள். பொருள் நிறைந்த அந்தத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை, இளம் கைதிகளிடம் கூறிய ஒரே ஓர் அறிவுரை இதுதான்: "மனம் தளராமல் முயலுங்கள். உங்கள் நம்பிக்கையை யாரும் திருடிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்". தான் மேற்கொண்ட பல அயல்நாட்டுப் பயணங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக்கைதிகளைச் சந்தித்துள்ளார். சிறைகளுக்குச் சென்ற பொழுதெல்லாம், "நம்பிக்கை தளரக்கூடாது" என்பதை ஒரு தாரக மந்திரமாக அவர் கூறி வந்துள்ளார்.

நவம்பர் 6, இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறைப்பட்டோரின் யூபிலித் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுகிறார். இத்தாலி, இங்கிலாந்து, மலேசியா, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா உட்பட, 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள 4000த்திற்கும் அதிகமான கைதிகள், சிறைக்காவலர்கள், சிறையில் அருள்பணியாற்றுவோர், இந்த யூபிலியில் கலந்துகொள்கின்றனர். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைச் சின்னமாக விளங்கும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், ஆயிரக்கணக்கில் சிறைக்கைதிகள் பங்கேற்கும் முதல் திருப்பலி இது என்பது, நம் திருஅவைக்கு, புதியதோர் இலக்கணத்தைத் தருகிறது.

இந்த யூபிலியின் ஒரு சில சிறப்பு அம்சங்களைக் குறித்து பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: "இந்த யூபிலி திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பங்களை மிலான் நகரின் ‘ஓப்பெரா’ (Opera) சிறைக்கைதிகள் உருவாக்கியுள்ளனர். இத்திருப்பலியின்போது, பீடத்திற்கருகே வைக்கப்பட்டுள்ள ஒரு மரச்சிலுவை, 14ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 14ம் நூற்றாண்டு முதல், இன்று வரை கொண்டாடப்பட்ட அனைத்து யூபிலிகளிலும் பங்கேற்றப் பெருமை கொண்டது, அச்சிலுவை. அச்சிலுவைக்கருகே, 'இரக்கத்தின் அன்னை மரியா'வின் திரு உருவம் வைக்கப்பட்டுள்ளது. அன்னை மரியா தன் கரங்களில் குழந்தை இயேசுவைத் தாங்கியிருப்பது போலவும், குழந்தை இயேசுவின் கரங்களில், திறக்கப்பட்டுள்ள கைவிலங்கு ஒன்று இருப்பது போலவும் இந்த ஓவியம் அமைந்துள்ளது" என்று பேராயர் பிசிக்கெல்லா கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் சிகர நிகழ்வுகளில் ஒன்றான 'சிறைப்பட்டோரின் யூபிலி', கைதிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் அருள் வழங்கும் தருணமாக அமையட்டும். 'சிறைப்பட்டோரை'க் குறித்து நாம் கொண்டுள்ள முற்சார்பு விலங்குகளை, குழந்தை இயேசு, நம் உள்ளங்களிலிருந்து அகற்றுமாறு மன்றாடுவோம். தங்களுக்கென 'மறுவாழ்வை' அமைத்துக்கொள்ள முயலும் கைதிகளுக்கு, இறைவன், அருள் நிறைந்த மறுவாழ்வை வழங்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.