2016-11-05 15:44:00

திருப்பீட வாழ்வுக் கழகத்தின் புதிய சட்ட வரைவு


நவ.05,2016. திருப்பீட வாழ்வுக் கழகம் செயல்படும்விதம் குறித்த, புதிய சட்ட வரைவு ஒன்றை, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம். 

இந்தப் புதிய சட்ட வரைவில், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் இயல்பு, அதன் தோற்றம், அதன் அமைப்பு, அதன் உறுப்பினர்கள், அது செயல்படும்முறை, அதன் வளங்கள் போன்றவை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

பல ஆண்டுகளாக இடம்பெற்ற தயாரிப்புக்களுக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, இக்காலத்தில், மனித வாழ்வின் நன்னெறிகள், முன்வைக்கும் சிக்கலான பல சவால்களுக்கு, சிறந்த வகையில் பதிலளிக்க உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்புதிய சட்ட வரைவு, 2017ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும், இது, அடுத்த ஐந்து ஆண்டுகள்வரை அமலில் இருக்கும் என்றும், திருப்பீடம் அறிவித்துள்ளது. 

திருப்பீட வாழ்வுக் கழகத்தில், இளையோர், அங்கம் வகிக்க இடமளிக்கப்பட்டுள்ளதன் வழியாக, அவர்களின் பணி, நன்முறையில் ஆதரவளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வழியமைக்கும் என்றும், இக்கழகத்தில், உறுப்பினர்கள் நிலை புதுப்பிக்கப்பட வாய்ப்பளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.     

மனித வாழ்வை, குறிப்பாக, கிறிஸ்தவ அறநெறி சார்ந்தவற்றில், உயிரியல் அறநெறியை ஊக்குவித்து பாதுகாப்பதற்கென, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், திருப்பீட வாழ்வுக் கழகம் உருவாக்கப்பட்டது எனவும், இக்கழகத்தின் சட்ட வரைவு, 1994ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, திருத்தந்தை வெளியிட்ட, Vitae Mysterium என்ற motu proprio அறிக்கையில் விவரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.