2016-11-05 15:28:00

திருத்தந்தை, Rhine-Westphalia முதலமைச்சர் சந்திப்பு


நவ.05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மனியின் North Rhine-Westphalia மாநில முதலமைச்சர் Hannelore Kraft அவர்களை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசினார்.  

NRW என, பொதுவாக அழைக்கப்படும் North Rhine-Westphalia மாநிலம், பரப்பளவின்படி, ஜெர்மனியின் நான்காவது பெரிய மாநிலமாகும், இம்மாநிலத்தில், ஜெர்மனியின் பத்து பெரிய நகரங்களில், நான்கு பெரிய நகரங்களான, Cologne, Düsseldorf, Dortmund, Essen ஆகியவை உள்ளன. இங்கு, ஏறக்குறைய, ஒரு கோடியே 80 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.  

இன்னும், “மன்னிப்பு, அன்பின் சாரம். ஏனென்றால், இது, தவறுகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் அவற்றைத் திருத்தும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், திருஅவை வரலாற்றில் முதல்முறையாக, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானில் சிறைக் கைதிகளின் யூபிலி விழா, திருத்தந்தையின் தலைமையில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து, இத்தாலி, போர்த்துக்கல், மடகாஸ்கர், சுவீடன், நெதர்லாந்து, லாத்வியா, மலேசியா, மெக்சிகோ, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு, தென்னாப்ரிக்கா ஆகிய 12 நாடுகளிலிருந்து, கைதிகள், சிறைக் காவலர்கள், சிறையில் ஆன்மீகப் பணியாற்றுவோர் என, நான்காயிரத்திற்கும் அதிகமானோர், இஞ்ஞாயிறு காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் யூபிலி திருப்பலியில் கலந்துகொள்வார்கள்.

இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காவில் கைதிகளில் சிலர் வழங்கும் சாட்சியப் பகிர்வுகளுக்குப் பிறகு, 10 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூபிலி திருப்பலியை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புத் திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பம், மிலான் நகரின் ஓப்பேரா சிறையில் உள்ள கைதிகள் தயாரித்துள்ள அப்பம் என்றும், இந்த யூபிலியின் பாதுகாவலராக விளங்கும், இரக்கத்தின் அன்னை மரியா, தன் கரங்களில் தாங்கியிருக்கும் குழந்தை இயேசு, திறக்கப்பட்ட கைவிலங்குடன் காணப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.