2016-11-05 15:36:00

எதிர்விளைவுகளைக் கொணரும் அறிவற்ற போர் நிறுத்தப்பட அழைப்பு


நவ.05,2016. மத்திய கிழக்குப் பகுதியில் காணப்படும் சூழல்கள் எவ்வளவுதான் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அமைதிக்கான தணியாத தாகம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மட்டும், ஒருபோதும் கைவிடப்படக் கூடாது என்று, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

அண்மை கிழக்கு நாடுகளில், பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களுக்கு, ஐ.நா. நிவாரணப் பணி அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்து, ஐ.நா.வின் 71வது பொது அமர்வில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான, திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் மிகவும் தேவைப்படுகின்றன என்றும், இந்த மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவையின் பிறரன்பு அமைப்புகள் ஆற்றிவரும் உதவிகள் பற்றியும் எடுத்துரைத்தார் பேராயர் அவுசா.

புலம்பெயர்ந்த மக்களுக்கு, பெருமளவாக, தொடர்ந்து உதவிவரும் லெபனான் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்குத் திருப்பீடத்தின் நன்றியையும் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஆன்மீகப் பாரம்பரியச் சொத்தாக விளங்கும் எருசலேம் நகருக்கு, நீதியுடன்கூடிய நிலைத்த தீர்வு காணப்படவும் கேட்டுக்கொண்டார்.

தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஆதரவுடன், மத்திய கிழக்குப் பகுதியில், தற்போது இடம்பெற்றுவரும் இராணுவத் தீர்வுகளும், அறிவற்ற வன்முறையும், போர்களும், அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்களை அதிகரித்தே வருகின்றன என்றும், தற்போதைய ஆயுத மோதல்களுக்குப் பதிலாக, மனிதாபிமான உதவிகள் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.