2016-11-04 14:52:00

தென்கிழக்கு ஆசியாவில் தொற்று நோய்கள் ஒழிக்கப்பட அழைப்பு


நவ.04,2016. இந்தியா உட்பட, தென்கிழக்கு ஆசியாவில், தொற்று நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்வேளை, அந்நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு, தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்று, WHO என்ற, உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தொற்று நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக, காசநோய் உள்ளது என்றும், 2030ம் ஆண்டின், ஐ.நா. வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, காச நோய் பரவாமல் தடுப்பது இன்றியமையாதது என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

காச நோயால் இறப்பவர்களும், காச நோய்க்கு ஆளானவர்களும், உலக அளவில் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வந்தாலும், அண்மைக் காலமாகச் சில நாடுகளில் காச நோய்க்கு ஆளாகும் புதியவர்களின் எண்ணிக்கையும், காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும், இதற்கு முன்னால் கணிக்கப்பட்டதைவிட அதிகமாக உள்ளன என்று, WHO நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில், 2014ம் ஆண்டில் 22 இலட்சமாக இருந்த காச நோயாளரின் எண்ணிக்கை, 2015ம் ஆண்டில், 28 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுகூட இடைக்கால மதிப்பீடுதான் எனவும், உண்மையில், காச நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கலாம் எனவும் தெரிகிறது.

இந்தியாவில், காச நோய் முழுவதும் ஒழிக்கப்படாதவரை, இந்நோய் ஒழிப்பில், உலகம் வெற்றி பெறுவது இயலாதது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.