2016-11-03 16:16:00

இனவெறியும், பாகுபாட்டு உணர்வும் பெருகியுள்ளது-பேராயர் அவுசா


நவ.03,2016. இனவெறியை ஒழிப்பதற்கு உலக அளவில் உறுதிமொழி அறிக்கை விடுத்ததன் 50ம் ஆண்டு நிறைவை, சென்ற ஆண்டு நாம் கொண்டாடினாலும், இன்று, உலகில் இனவெறியும், பாகுபாட்டு உணர்வும் பெருகியுள்ளதைக் காண முடிகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 71வது பொது அமர்வில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், “அன்னியரைக் கண்டு அச்சம், இனவெறி, பாகுபாடுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துக் பரிமாற்றத்தில் இவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக, தனிப்பட்ட முறையில், மறைமுகமாக வெளிப்பட்டுவந்த இனவெறி மற்றும் பாகுபாட்டு செயல்பாடுகள், தற்போது, மிக வெளிப்படையாக, திட்டமிட்டு நடைபெறுவது, இன்று நாம் சந்திக்கும் மிகப் பெரிய ஆபத்து என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வன்முறை வெளிப்பாடுகளை, அரசியல், மத கொள்கைகளால் நியாயப்படுத்த முயல்வதும் மிக ஆபத்தான ஒரு போக்கு என்று பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.

இத்தகைய வன்முறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, புலம்பெயர்ந்து செல்லும் மக்கள், கடலில் உயிரிழக்கும் கொடுமை, நடப்பு ஆண்டில் மிக அதிக அளவில் ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது என்று, கூறிய பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா.அவையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டினார்.

இப்புள்ளி விவரங்களின்படி, 2015ம் ஆண்டு மத்தியத் தரைக்கடலில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,771 என்றும், இவ்வாண்டில் முதல் 10 மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை 3,740 ஆக இருப்பது மிக வேதனை தருகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.