2016-11-02 15:11:00

சுவீடனிலிருந்து திரும்பிய விமானத்தில் திருத்தந்தை உரையாடல்


நவ.02,2016. புலம் பெயர்ந்தோரை வரவேற்கும் எந்த ஒரு நாடும், அவர்களை, தனிப்பட்ட முகாம்களில் தங்க வைப்பதற்குப் பதில், தங்கள் நாட்டு சமுதாயத்தில் ஒருங்கிணைக்க முயலவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவீடன் நாட்டு பயணத்தை முடித்து திரும்பி வரும் வழியில் கூறினார்.

தன் வெளிநாட்டு பயணங்களின் இறுதியில், தன்னோடு பயணிக்கும் செய்தியாளர்களுடன் மனம் திறந்த உரையாடலை மேற்கொண்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டுப் பயணத்தை, நவம்பர் 1, இச்செவ்வாயன்று நிறைவு செய்து திரும்பிய வேளையில், புலம்பெயர்ந்தோர் குறித்து எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது, பெண்கள் அருள்பணியாளர்களாக திருநிலை பெறுவது, அருங்கோடை இயக்கங்களுடன் உறவு, மனித வர்த்தகம், திருத்தந்தையின் அடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற தலைப்புக்களில் செய்தியாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு திருத்தந்தை பதிலளித்தார்.

பெண்கள் அருள்பணியாளர்களாக திருநிலை பெறுவது குறித்து கேள்வி எழுந்தபோது, கத்தோலிக்கத் திருஅவையில் இது சாத்தியமல்ல என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் வெளியிட்ட கருத்து, இன்றளவும் நடைமுறையில் உள்ளது என்றும், அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

பெண்கள் திருஅவையில் ஆற்றக்கூடிய உன்னதமான பணிகள் பல உள்ளன என்று வலியுறுத்தியத் திருத்தந்தை, இயேசுவின் முதல் சீடரான மரியன்னை, திருஅவையில் மிக முக்கிய பங்கு வகிப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

உலகில் பரவி வரும் மத சார்பற்ற நிலை குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், மத சார்பற்ற நிலைக்கும், மத நம்பிக்கை ஏதுமின்றி இவ்வுலகமே கதி என்று வாழும் நிலைக்கும் வேறுபாடுகள் உள்ளன என்று தெளிவுபடுத்திய திருத்தந்தை, உலகப் போக்கு, திருஅவையில் பல வடிவங்களில் நுழைவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்.

தான் இந்தியாவுக்கும், பங்களாதேஷ் நாட்டுக்கும் செல்வது உறுதி என்றாலும், இந்தப் பயணத் திட்டங்கள் எதுவும் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் விமானப் பயணத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.