2016-11-02 14:35:00

இரக்கத்தின் தூதர்கள் : குடிபெயர்வோர் பாதுகாவலர்


நவ.02,2016. உலகளவில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், குடிபெயர்வோர் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. அவர்கள் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கும், நாடுகள் திணறுகின்றன. ஆனால், ஏறக்குறைய 1880க்கும், 1924ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே, நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட இத்தாலியர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினர். இவர்களில் பாதிப்பேர், 1900 மற்றும் 1910ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குடியேறியவர்கள். இப்படி குடியேறியவர்களில் ஏறக்குறைய 84 விழுக்காட்டினர், தென் இத்தாலி மற்றும் சிசிலித் தீவில் கடும் வறுமையால் துன்புற்றவர்கள். இவர்கள், அந்நியரின் அநியாய ஆட்சிமுறை மற்றும், 1861ம் ஆண்டில், இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட பின்னர், தென் இத்தாலியர் மீது விதிக்கப்பட்ட வரி அமைப்புமுறையால் மிகவும் துன்புற்றவர்கள். தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் வழிவந்தவர்கள். அக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறிய இத்தாலிய மக்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்தவர்கள், இயேசுவின் திருஇதய மறைத்தூது அருள்சகோதரிகள். இச்சபையைத் தொடங்கியவர் புனித பிரான்செஸ்கா சவேரியோ கபிரினி. 1946ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி புனிதராக உயர்த்தப்பட்ட இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடிமகனாக மாறிய முதல் வெளிநாட்டுப் புனிதராவார்.

அன்னை கபிரினி என அழைக்கப்படும், புனித பிரான்செஸ்கா சவேரியோ கபிரினி அவர்கள், 1850 ஆம் ஆண்டு ஜூலை 15ம் நாள், வட இத்தாலியில், லோதி என்ற நகரில், பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அகுஸ்தீனோ கபிரினி, செரி பழமரப் பண்ணை வைத்திருந்தார். பிரான்செஸ்காவின் உடன் பிறப்புகள் 13 பேர். பிரான்செஸ்கா குறைப் பிரசவத்தில் பிறந்ததால், இவர், தன் வாழ்வு முழுவதும், மிகவும் பலவீனமானவராகவே இருந்தார். இவர், ஆசிரியர் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார்., 1870ஆம் ஆண்டில், இவரின் பெற்றோர் இறந்த பின்னர், அர்லூனோவிலுள்ள திருஇதய புதல்விகள் சபையில் சேர விண்ணப்பித்தார். ஆனால், கபிரினியின் உடல்நலத்தைச் சுட்டிக்காட்டி, அவரைச் சபையில் அனுமதிக்கவில்லை. பின்னர், இவர், Codognoவில், இறைபராமரிப்பு கருணை இல்லத் தலைவியாகப் பணியைத் தொடங்கினார். அங்கு, சில பெண்களுடன், துறவு வாழ்வு வாழ்ந்தார். 1877ஆம் ஆண்டில், துறவற வார்த்தைப்பாடுகளை எடுத்தார். மறைத்தூதுப் பணிக்குப் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் சவேரியார் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக, தனது பெயரோடு சேவியர் என சேர்த்துக்கொண்டார். 1880ஆம் ஆண்டில், அன்னை கபிரினி அவர்களோடு சேர்ந்திருந்த வேறு ஆறு பெண்களும், துறவற வார்த்தைப்பாடுகளை எடுத்தனர். இந்த எழுவரும் இணைந்த சபைக்கு, இயேசுவின் திருஇதய மறைத்தூது அருள்சகோதரிகள் சபை(M.S.C.) என்றும் பெயர் சூட்டினர். இச்சபையின் கொள்கைகளை இவரே எழுதினார். இச்சபையின் தலைவராக, தனது இறப்புவரை இருந்தார் அன்னை கபிரினி.

அன்னை கபிரினி அவர்கள் ஆரம்பித்த சபையின் அருள்சகோதரிகள், இத்தாலி எங்கும், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு கருணை இல்லங்களைத் தொடங்கினர். ஏழைப் பிள்ளைகளின் வருமானத்திற்கென, தையல் கலையைக் கற்றுக் கொடுத்தனர். இலவசப் பள்ளிகளையும் நடத்தினர். அன்னை கபிரினி அவர்கள், இளவயதிலிருந்தே, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று, மறைத்தூதுப் பணியாற்ற விரும்பினார். எனவே, இவர், 1877ஆம் ஆண்டில், புனித திருத்தந்தை 13ம் லியோ அவர்களிடம், சீனாவுக்குச் சென்று, மறைத்தூதுப் பணியாற்ற அனுமதி கேட்டார். ஆனால், திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், அன்னை கபிரினி அவர்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று, கடும் வறுமையின் காரணமாக, அங்குக் குடியேறியுள்ள இத்தாலிய மக்களுக்கு உதவுமாறு கூறினார். "கிழக்குக்கு அல்ல, ஆனால் மேற்குக்கு" என்று ஆலோசனை அளித்தார் திருத்தந்தை 13ம் லியோ. அன்னை கபிரினி அவர்கள், ஆறு சகோதரிகளுடன், 1889ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நியு யார்க் நகரை அடைந்தார். அங்கு அவர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஏமாற்றத்தையும், இன்னல்களையும் சந்தித்தார். புதிய தங்குமிடம் கிடைக்கும்வரை, பிறரன்பு சகோதரிகள் இல்லத்தில் தங்குவதற்கும், கருணை இல்லம் ஒன்றைத் தொடங்குவதற்கும் இவருக்கு அனுமதி கிடைத்தது. நியு யார்க் நகரின் West Parkல் ஆரம்பிக்கப்பட்ட கருணை இல்லம், தற்போது, புனித கபிரினி இல்லம் என அழைக்கப்படுகின்றது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், குடிபெயர்ந்த இத்தாலிய மக்களுக்கு, மறைக்கல்வி, மற்றும் பிற வகுப்புக்களையும், ஏராளமான கைவிடப்பட்ட மக்களுக்குத் தேவையானவைகளையும் வழங்கினார் அன்னை கபிரினி. நியு யார்க் நகரில், கொலம்பஸ் மருத்துவமனை மற்றும் இத்தாலிய மருத்துவமனையையும் இவர் தொடங்கினார். சிகாகோவிலும், கொலம்பஸ் மருத்துவமனையின் கிளையைத் தொடங்கினார். அந்நகரில், கபிரினி என்ற பெயரில் ஒரு சாலையே உள்ளது. நியு யார்க், சிகாகோ, Des Plaines, Illinois; Seattle; New Orleans; Denver; Golden, Colorado; Los Angeles; Philadelphia, இன்னும், தென் மெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் பணியை விரிவாக்கினர் இச்சபையினர். சீனாவுக்கு இச்சபையினர் சென்றாலும், அங்கு எழுந்த கிளர்ச்சியால், சிறிது காலத்திலேயே அங்கிருந்து சைபீரியா சென்றனர். புனித பிரான்செஸ்கா சவேரியோ கபிரினி அவர்கள், வயிற்றுப்போக்குப் பிரச்சனையால், தனது 67வது வயதில், 1917ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி, சிகாகோ மருத்துவமனையில் காலமானார். இப்புனிதர் குடிபெயர்வோரின் பாதுகாவலர் ஆவார். “இயேசுவின் திருஇதயத்தின் மிக உன்னத மகிமைக்காக(Ad Majorem Gloriam Sacratissimum Cordis Jesu)” என்ற விருதுவாக்குடன், இச்சபையினர்,  நோயாளர்க்கும், ஏழைகளுக்கும் ஆறு கண்டங்களில், பதினைந்து நாடுகளில் ஆற்றி வருகின்றனர்.

அன்பர்களே, அந்நியரை வரவேற்கும் உடல்சார்ந்த இரக்கச் செயலை ஆற்றுவதற்கு இந்த இரக்கத்தின் யூபில் ஆண்டில் நாம் அழைக்கப்படுகிறோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.