2016-11-02 15:20:00

அனைத்து ஆன்மாக்களின் திருநாள் திருப்பலியாற்றும் திருத்தந்தை


நவ.02,2016. நவம்பர் 2, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் அனைத்து ஆன்மாக்களின் திருநாளன்று, "நம் அன்புக்குரியவர்களின் கல்லறைகளுக்கு நாம் நம்பிக்கையோடு செல்கிறோம்; அங்கு, யாரும் எண்ணிப் பார்க்காதவர்களுக்காகவும் நாம் செபிக்க இயலும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

மேலும், "நம் தந்தை நம்மைக் கண்காணிக்கின்றார், நம் கடந்த காலத்தைத் தூய்மையாக்கவும், ஒற்றுமையை நோக்கி பயணிக்கவும், அவரது அன்புப்பார்வை நம்மைத் தூண்டுகிறது" என்ற டுவிட்டர் செய்தியை, நவம்பர் 1, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டில் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய வேளையில், வெளியிட்டார்.

நவம்பர் 1, இச்செவ்வாய் பிற்பகல் 3.30 மணியளவில், உரோம் நகர் சம்பீனோ விமான நிலையத்தில் வந்திறங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கப்படி, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அன்னையின் திரு உருவத்திற்கு முன், தன் சுவீடன் பயணத்திற்கு நன்றி செலுத்தியபின், வத்திக்கானுக்குத் திரும்பினார்.

நவம்பர் 2, இப்புதனன்று திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை இடம்பெறவில்லை என்பதும், இப்புதன் மாலை, நான்கு மணிக்கு, உரோம் நகரின் கல்லறை தோட்டத்தில் அனைத்து ஆன்மாக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.