2016-11-01 12:44:00

அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவில் திருத்தந்தையின் மறையுரை


நவ.01,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். புனிதர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, நம்மிடையே, கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக வாழ்ந்து, நம்மைவிட்டுப் பிரிந்திருக்கும் அனைவரையும் இன்று நினைவுகூருகிறோம். இவர்களில், நம் குடுமபத்தைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் உள்ளனர்.

இன்று நாம் புனிதத்தைக் கொண்டாடுகிறோம். மிகச் சிறந்த, பிரம்மாண்டாமான செயல்களில் வெளிப்படும் புனிதம் அல்ல, மாறாக, ஒவ்வொரு நாள் வாழ்வையும், அசைக்கமுடியாத அர்ப்பணத்துடன் வாழும் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.

அனைத்துப் புனிதர்களிடமும் நாம் காணக்கூடிய ஒரு தனிப்பட்ட பண்பு, அவர்கள் உண்மையில் மகிழ்வுடன் இருந்தனர் என்பதே. தங்கள் வாழ்வின் அடித்தளம், இறைவனின் அன்பு என்பதை உணர்ந்ததே, அவர்கள் கொண்டிருந்த மகிழ்வின் இரகசியம். எனவேதான் அவர்களை பேறுபெற்றவர்கள் என்று அழைக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய பேறுபெற்றவர்கள் கூற்றைக் கேட்டோம்.

இயேசு கூறிய அந்த வரிசையில், "கனிவுடையோர் பேறுபெற்றோர்" என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத். 11:29) என்று இயேசு தன்னைப் பற்றி கூறுகிறார். கனிவுடன் வாழ்வது, நம்மை இயேசுவிடமும், ஒருவர் ஒருவரிடமும் நெருங்கிவரச் செய்கிறது. நம்மைப் பிரிக்கும் சக்திகளை புறந்தள்ளி, ஒற்றுமையின் பாதையில் அழைத்துச் செல்கிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த புனித Mary Elizabeth Hesselblad, மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான Vadstena நகர், புனித Bridget ஆகியோர், கனிவின் வழி வாழ்ந்தனர். லூத்தரன் சீர்திருத்தத்தின் 500ம் ஆண்டை நாம் இணைந்து கொண்டாடுவது, இந்தக் கனிவின் வெளிப்பாடு.

பேறுபெற்றோர் வாக்கியங்கள், கிறிஸ்தவர்களின் அடையாள அட்டைகள். இன்றைய உலகிற்கு ஏற்றவாறு நாம் பேறுபெற்றவர்களாக வாழ்வதற்கு ஓர் அழைப்பு இது. கொடுமைகளைச் சகித்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் மீது சுமத்துவோரை மன்னிப்பவர்கள், பேறுபெற்றோர். கைவிடப்பட்டவர்கள், ஓரங்களில் தள்ளப்பட்டவர்கள் கண்களை பார்த்து, தங்களது அருகாமையை அவர்களுக்குக் காட்டுவோர், பேறுபெற்றோர். நமது பொதுவான இல்லமாகிய இவ்வுலகைக் காப்பவர்கள், பேறுபெற்றோர். தங்கள் சொந்த சுகங்களைத் துறந்து, அயலவருக்கு உதவிகள் செய்வோர், பேறுபெற்றோர். கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக செபிப்பவர்கள், உழைப்பவர்கள், பேறுபெற்றோர். இவர்கள் அனைவரும் இறைவனின் இரக்கத்திற்கும், கனிவிற்கும் தூதர்களாய் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் விருதை நிச்சயம் பெறுவர்.

அன்பு சகோதர, சகோதரிகளே, தங்கள் வாழ்வாலும், பரிந்துரையாலும் புனிதர்கள் நம் வாழ்வுக்குத் தூண்டுதலாக அமைகின்றனர். அதேபோல், நாம் புனிதர்களாக மாற, ஒருவர் மற்றவருக்குத் தேவை. நமது கிறிஸ்தவ அழைப்பை மகிழ்வுடன் ஏற்று, அதை முழுமையாக்க நாம் இறைவனை இணைந்து மன்றாடுவோம். அனைத்துப் புனிதர்களின் அரசியான விண்ணகத் தாய் நமக்கு உதவி செய்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.