2016-10-31 16:06:00

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்


அக்.31,2016. மத்திய இத்தாலியில் இஞ்ஞாயிறன்று காலையில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிப்பட்டமுறையில் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே, இரு மாதங்களுக்கு முன்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அதேப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லையெனினும், பலர் காயமடைந்துள்ளனர், மற்றும் இழப்புக்களின் மதிப்பீடு பெரிய அளவில் உள்ளது.  

நோர்சியா நகரில் பிறந்த புனிதர் பெனடிக்ட்டின் பெயரில் அமைந்திருந்த பழமைமிக்க முக்கிய பேராலயம், முற்றிலுமாக அழிந்துள்ளது.

இதற்கிடையே, வெளிப்பக்க சுவரில் விரிசல் ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பேராலயம், மேலும் ஆய்வுகளுக்காக மூடப்பட்டுள்ளது. உரோம் நகரின் மெட்ரோ இரயில் பாதைகளும், நகரின் வெளிப்புற இணைப்புச் சாலைகளும் ஞாயிறன்று மூடப்பட்டிருந்த நிலையில், இத்திங்களன்று, பள்ளிக் கட்டிடங்களின் உறுதிப்பாட்டை சோதனைச் செய்யும் வகையில் உரோம் நகரின் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.