2016-10-31 15:55:00

நம் வெளித் தோற்றத்தைத் தாண்டி உள்மனதை நோக்குபவரே இறைவன்


அக்.31,2016. மக்களால் எதிரியாக நோக்கப்பட்ட சக்கேயுவின் கடந்த கால பாவப் பின்னணியை நோக்காமல், வருங்கால நன்மைத்தனத்தை நோக்கிய இயேசுவின் அணுகுமுறை குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைக் காண்பதற்காக காட்டு அத்திமரத்தின்மேல் ஏறியிருந்த சக்கேயுவை நோக்கி, இயேசு, அவர் பெயர் சொல்லி அழைத்து, அவரின் வீட்டில் தங்குவதற்கான விருப்பத்தை வெளியிட்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவிகளின் குறைகளைக் கண்டித்து அவர்களை திருத்த நினைக்கும் நம் மனநிலைகளைவிட, மக்களின் பாவங்களையும் அவர்களைக் குறித்த முற்சார்பு எண்ணங்களையும் தாண்டிய இயேசுவின் அணுகுமுறை நமக்கான பாடம் என்றுரைத்தார்.

இத்தகைய அணுகுமுறைகளால், ஒருவருக்குள்ளிருக்கும் நன்மைத்தனத்தை நாம் வெளிக்கொணர முடியும் என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய கடவுளின் அணுகுமுறையே நம்மில் மாற்றத்தை உருவாக்கவும், நன்மைத்தனத்தை நோக்கி நம்மை நடத்திச் செல்லவும் உதவுகிறது என கூறினார்.

நம் பாவ நிலைகளால் உருவாக்கப்பட்டுள்ள தடைகளையும் தாண்டி வரும் இறைவன், நமக்கு புது வாழ்வை வழங்குகிறார், ஏனெனில் அவர் வெளித்தோற்றத்தைப் பார்த்து எதையும் கணிப்பதில்லை, மாறாக, பாவத்தால் காயப்பட்டிருக்கும் உள்மனதை நோக்குகிறார் என, தன் மூவேளை செப உரையில் மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.