2016-10-31 15:46:00

இது இரக்கத்தின் காலம் : எதிர்மறை உணர்வுகளின் எடை அதிகம்


ஒருசமயம், ஒரு சிட்டுக்குருவிக்கு வினோதமான செயல் ஒன்றைச் செய்ய ஆசை.  அதனால், தனது முதுகில் ஒரு பையைக் கட்டிக்கொண்டு சிட்டெனப் புறப்பட்டது. அது சென்ற வழியில், டும்டும் என்ற துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அதைப் பார்த்த குருவி, மனிதர்களிடையே சண்டை நடக்கிறது, அதனால், அவர்களின் கோப உணர்வைச் சேகரில்லாமே என்று நினைத்து, அவர்களிடம் வெளிப்பட்ட அந்த உணர்வைச் சேகரித்து பையில் போட்டுக்கொண்டு பறந்தது. அடுத்து ஓரிடத்தில், ஒருவர் எதையோ பறிகொடுத்ததுபோல் இருப்பதைப் பார்த்து, ஏமாற்றத்தையும் சேகரித்து பையில் போட்டுக்கொண்டு, உற்சாகமாகப் பறந்தது. பின்னர், நான்கைந்துபேர் குடித்துவிட்டு இரகளைப் பண்ணிக்கொண்டிருந்ததைப் பார்த்தது குருவி. எனவே, குடிவெறியையும் சேகரித்தது. இப்படி, அந்தச் சிட்டுக்குருவியின் பை, மனிதரின் எதிர்மறை உணர்வுகளால் நிரம்பியது. தனது சேமிப்பை நினைத்து மகிழ்ந்து போன சிட்டுக்கருவிக்கு, ஒரு கட்டத்தில் பறக்கவே முடியவில்லை. சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தது. அதைப் பார்த்த ஒரு பூனை, என்ன நண்பா, உடம்புக்குச் சரியில்லையா? எனக் கேட்டது. ஆமாம். என்னால் பறக்கவே முடியவில்லை. எனது சக்தியெல்லாம் போய்விட்டதுபோல் உணர்கிறேன். காரணமும் தெரியவில்லை என்று கவலையோடு சொன்னது குருவி. அப்போது பூனை, நண்பா, உனது முதுகில் தொங்கும் பையில் என்ன இருக்கின்றது? என்று கேட்டது. அதுவா, எனது பொழுதுபோக்குக்காக, மனிதர்களின் உணர்வுகளைச் சேகரித்தேன் என்றது குருவி. அவை என்ன என, ஆர்வமிகுதியில் கேட்டது பூனை. மனிதர் மத்தியில் நான் பார்த்த கோபம், பொறாமை, கர்வம், பகைமை போன்றவைதான் என்றது சிட்டுக்குருவி. ஓ, அப்படியா கதை, இந்தப் பைதான் உன்னைப் பறக்கவிடாமல் செய்கின்றது. அதைக் கொட்டிப்பாரேன் என்று ஆலோசனை சொன்னது பூனை. மனமில்லாமல், முதலில் பகைமையை வெளியே எடுத்துப் போட்டது குருவி. கொஞ்சம் பறக்க முடிந்தது. உடனடியாக பையைக் காலியாக்கியது. வழக்கம்போல் வானில் சிறகடித்துப் பறந்தது சிட்டுக்குருவி.

எதிர்மறை உணர்வுகளின் எடை அதிகம். அவை நம் பலத்தையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.