2016-10-31 16:07:00

Lund லூத்தரன் சபை பேராலயத்தில் வழிபாடு


அக்.31,2016. Lund லூத்தரன் சபை பேராலயத்தில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில், முதலில் லூத்தரன் பேராயர் Jackelén அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். நாம் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரச் சூழல்களிலிருந்து இங்குக் கூடியுள்ளோம். எனவே, ஒரு நிமிடம் நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். ஏனென்றால், இந்நாள், மாபெரும் நம்பிக்கையின் நாள். நாம், வியப்பு மற்றும் கவலை அனுபவங்களைக் கொண்டிருக்கிறோம். அன்பு மற்றும் இரக்கத்தின் வியப்புக்களைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவில் அகமகிழ்கின்றோம். மனிதக் குடும்பத்தின்மீது சுமத்தப்பட்டுள்ள பிரிவினையின் வேதனை குறித்து கவலையடைகிறோம். இதயங்கள், மனங்கள் மற்றும் வாழ்க்கைநிலைகள் மாற்றத்திற்காக அழைக்கப்படுகிறோம். மனம் வருந்துதல் அர்த்தமுள்ளதாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்க வேண்டும். அழிவு சக்திகள் வெற்றி காணப்பட வேண்டும். குணமடைதல் இயலக்கூடியதே. அமைதி வளர்கிறது. நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு லூத்தரன் பேராயர் Jackelé அவர்கள் உரையாற்றிய பின்னர்,  கத்தோலிக்க ஆயர் Arborelius அவர்களும், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

இயேசு, நம் மீட்புக்காக இறப்பதற்கு முன்னர், ஒன்றிப்புக்காக நாம் செபிக்குமாறு கூறினார். அதைச் செய்வதற்காகவே நாம் எல்லாரும் இங்கு இன்று கூடியுள்ளோம். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் ஒன்றிப்புக்கு ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். பிரிவினைக்குக் காரணமான, நம் பாவங்கள் மற்றும் குறைகளுக்காக, வருந்துகிறோம். அனைத்திற்கும் மேலாக, ஒன்றிப்பை, நிறைவாக அடைய, நாம் செபிக்கின்றோம். இந்த ஒன்றிப்புக்காகப் பணியாற்றுவதிலும் செபிப்பதிலும், நாம் எப்போதும் பிரமாணிக்கமாகச் செயல்பட ஆண்டவர் உதவுவாராக. இவ்வாறு கத்தோலிக்க ஆயர் Arborelius அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

சுவீடனில் ஏறக்குறைய 84 விழுக்காட்டினர் லூத்தரன் கிறிஸ்தவ சபையினர். கத்தோலிக்கர் 1.15 விழுக்காட்டினர் மட்டுமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.