2016-10-29 15:50:00

மூன்றாவது உலக சமூகநல இயக்கங்கள் மாநாடு நவம்பர் 2-5


அக்.29,2016.      நவம்பர் 2, வருகிற புதனன்று தொடங்கும், மூன்றாவது உலக சமூகநல இயக்கங்கள் மாநாடு குறித்த விபரங்கள், இவ்வெள்ளியன்று, வத்திக்கானில், செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

வருகிற நவம்பர் 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை, நடைபெறும் இம்மாநாடு பற்றி, திருப்பீட, நீதி மற்றும் அமைதி அவையின் பிரதிநிதிச் செயலர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் தலைமையிலான குழு விவரித்தது.

உரோம் பன்னாட்டு Maria Mater Ecclesiae கல்லூரியில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், 65 நாடுகளிலிருந்து, 92 சமூகநல இயக்கங்களின், ஏறக்குறைய இருநூறு பிரிதிநிதிகள், கலந்துகொள்வார்கள் என, இக்குழு அறிவித்தது.

வேலை, தங்குமிடங்கள் மற்றும் நிலம் என்ற தலைப்பிலும், இயற்கை, குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகியோரைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலும், இம்மாநாடு நடைபெறும் என்றும், இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும், மெய்யியலாளருமான வந்தனா சிவா அவர்கள் உட்பட சில முக்கிய ஆர்வலர்கள், இதில் உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் கழகங்களோடு சேராத மற்றும் எந்தவித அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லாத அடித்தட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவது குறித்து இம்மாநாட்டில் ஆராயப்படும் எனவும், அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.