2016-10-29 15:42:00

சுவீடன் பயணத்தையொட்டிய திருத்தந்தையின் நேர்காணல்


அக்.29,2016. சுவீடன் நாட்டிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணத்தையொட்டி, இயேசு சபையினர் நடத்தும் La Civiltà Cattolica இதழுக்கு, நீண்ட நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

சுவீடன் இயேசு சபையினரின், Signum கலாச்சார இதழின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி Ulf Jonsson அவர்களுக்கு, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம், திருத்தந்தை வழங்கிய நேர்காணல், இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

சுவீடன் பயணத்தின் நோக்கம், கத்தோலிக்க-லூத்தரன் உரையாடல், லூத்தரன் சபையினரிடமிருந்து கத்தோலிக்கர் கற்றுக்கொள்ள வேண்டியவை, கடவுளின் பெயரால் நடத்தப்படும் போர்கள் போன்ற கேள்விகளுக்குத், தன் கருத்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லூத்தரன் சபை சகோதர சகோதரிகளோடு, கத்தோலிக்கர் நெருக்கமாக வருவதைத் தான் எதிர்பார்ப்பதாகவும், நெருங்கி வருவது, நன்மையை விளைவிக்கும், மாறாக, விலகி இருப்பது, கசப்புணர்வை அதிகரிக்கும் என்று, கூறினார் திருத்தந்தை.

கத்தோலிக்கம், பிரிவினை, இவையிரண்டும் முரண்பட்ட சொற்கள் என்றும், ஒருவர் கத்தோலிக்கராகவும், பிரிவினைவாதியாகவும் இருக்க இயலாது என்றும் கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கர், கிறிஸ்தவ ஒன்றிப்புக்குச் சான்று பகர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவர்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டுமென்றும், கிறிஸ்தவ சபைகள் மத்தியில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பது பாவம் என்றும், உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது பற்றியும் கூறி, ஒருவர், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், போர் தொடுக்க முடியாது, அச்செயல், தெய்வநிந்தனை, அது சாத்தானின் செயல் என்றும் கூறினார்.

கத்தோலிக்கர், லூத்தரன் சபையினரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சீர்திருத்தம் மற்றும், மறைநூல் எனப் பதிலளித்த திருத்தந்தை, லூத்தர், இறைவார்த்தையை, மக்களின் கரங்களில் வைத்த ஒரு முக்கியமான காரியத்தைச் செய்தார் என்றும் தெரிவித்தார்.

பணம், பகைமைகள், விண்ணைக் கைப்பற்ற முயற்சிப்பது, ஆதிக்கம் போன்ற மதத்தோடு தொடர்புடைய சிலைவழிபாடுகள் உள்ளன என்றும், இச்சிலைவழிபாடு, போலியான மதம் என்றும், இது தவறான மத உணர்வு என்றும், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இந்தச் சுவீடன் பயணத்தை, செல்தல், ஒன்று சேர்ந்து நடத்தல் என்ற, இரு சொற்களுக்குள், தான் விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

லூத்தரன் சீர்திருத்தம் 1517ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.