2016-10-29 16:08:00

இயேசுவின் கல்லறை கல்பலகை, முதல் முறையாக திறப்பு


அக்.29,2016. இயேசுவின் கல்லறை மூடப்பட்டிருந்த கல்பலகை, நூற்றாண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது என, CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.

இயேசுவின் இறப்புக்குப் பின்னர், அவரது திருஉடல் கிடத்தப்பட்டிருந்ததாக நம்பப்படும் இந்தக் கல்பலகை, நீண்டகால அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அது, பாதுகாப்புக்காக, நூற்றாண்டுகளாக, ஒரு பளிங்குப் பலகையால் மூடப்பட்டிருந்தது. அது தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதை அகழ்வாராய்ச்சியாளர்களும், திருப்பயணிகளும், பல்வேறு சமயக் குழுக்களும் பார்வையிட்டு வருகின்றனர் என, அச்செய்தி நிறுவனம் கூறியது. 

எருசலேம், திருக்கல்லறை பசிலிக்காவிலுள்ள, இயேசுவின் கல்லறையை மூடியிருந்த இக்கல்பலகை பற்றிப் பேசிய, எருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 3ம் தியோபிலோஸ் அவர்கள், இயலக்கூடாதது, இயலக்கூடியதே என்ற உண்மையான செய்தியை இது தந்துள்ளது என்று கூறினார்.

பிரான்சிஸ்கன், அர்மேனியர், கிரேக்கர்கள், முஸ்லிம் பாதுகாவலர், யூத காவல்துறை அதிகாரிகள் என, பலர் இங்கு இருக்கிறோம், அனைவருக்கும் அமைதியும், ஒருவர் ஒருவர் மீதான மதிப்பும் தேவை என்பதை, இந்நிகழ்வு உணர்த்துகின்றது என்று, முதுபெரும் தந்தை 3ம் தியோபிலோஸ் அவர்கள், மேலும் கூறினார்.  

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.