2016-10-29 14:33:00

இது இரக்கத்தின் காலம் - வறியோர் இல்லங்களில் ஒளியேற்ற...


தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் ஒரு காணொளித் தொகுப்பில், பின்வரும் காட்சி இடம்பெறுகிறது:

இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்துகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்திக் கொண்டிருக்கும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளைஞர்.

இளைஞரையும், தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களையும் மாறி, மாறிப் பார்க்கும் அந்த வீட்டுத்தலைவரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.

வறியோரின் இல்லங்களில் ஒளியேற்றி, அவர்களுடன் விருந்து கொண்டாட, தீபாவளி ஒரு தகுந்த தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.