2016-10-28 15:00:00

அமைதியில் செபிக்கும் ஆழ்நிலை தியான சபையினர் திருஅவைக்கு...


அக்.28,2016. தூய ஆவியாரிடமிருந்து வருகின்ற பன்முகத்தன்மை குறித்து எவரும் அஞ்சத் தேவையில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பண வாழ்வு குறித்து நடைபெற்ற உலக கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆயர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளிடம் கூறினார்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட, ஏறக்குறைய இருநூறு பிரதிநிதிகளை,  இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அமைதியில் செபிக்கும் அடைபட்ட துறவு சபையினர், திருஅவைக்கு எவ்வளவு தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.

தூய ஆவியார், தாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில், காற்றை வீசுகிறார் என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின் முழு உடலின் நன்மைக்கும், ஆன்மீகத் தலைமையாக இருப்பது, அர்ப்பண வாழ்வு, என்றும் தெரிவித்தார்.

 

திருஅவையில் அர்ப்பண வாழ்வு, புதிய அர்ப்பண வாழ்வு நிறுவனங்களை தோற்றுவித்தல், மேய்ப்பர்களுக்கும், அர்ப்பண வாழ்வு வாழ்வோர்க்கும் இடையேயுள்ள உறவு ஆகிய மூன்று தலைப்புக்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவியரின் தன்னாட்சி உரிமையை, தனித்திருத்தல், சுதந்திரம், ஆகியவற்றோடு குழப்பக் கூடாது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர், திருஅவையின் உடலில், ஒருங்கிணைந்த அங்கம் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேய்ப்பர்களுக்கும், அர்ப்பண வாழ்வு வாழ்வோர்க்கும் இடையேயுள்ள உறவு பற்றி விளக்கிய திருத்தந்தை, ஒருவர் கட்டளையிடுவதும், அதற்கு மற்றவர் பணிந்து நடப்பதுமாக இருந்தால், அங்கே உண்மையான உறவு நிலவாது என்றும் கூறினார்.

தூய ஆவியாரிடமிருந்து வருகின்ற பன்முகத்தன்மை குறித்து எவரும் அஞ்சத் தேவையில்லை என்றுரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலம், பன்மைத்தன்மையை மதிக்க அழைக்கிறது என்றும், நாம் எல்லாரும் பாலங்களைக் கட்டுபவர்களாக வாழ வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.

மேலும், "பிறரன்பில் மறைந்திருக்கும் மாறா நியதி என்பது, எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருப்பதாகும், இதன் வழியாக, ஒற்றுமையும், அன்பும் நிலைத்திருக்கும்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 27, இவ்வியாழன் மாலையில், தன் டுவிட்டரில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.