2016-10-27 16:10:00

திருத்தந்தையின் துணிகரமான முடிவு - லூத்தரன் அவைச் செயலர்


அக்.27,2016. லூத்தரன் சீர்திருத்தம் உருவானதன் 500ம் ஆண்டு நிறைவை,  லூத்தரன் சபையினருடன் கொண்டாட திருத்தந்தை எடுத்துள்ள முடிவு, நன்மைகளைக் கொணரக்கூடிய, துணிகரமான முடிவு என்று, லூத்தரன் உலக அவையின் செயலர், Martin Junge அவர்கள் கூறியுள்ளார்.

லூத்தரன் சீர்திருத்த 500ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய நாட்கள், சுவீடன் நாட்டிற்குச் செல்லும் பயணம் குறித்து, Martin Junge அவர்கள் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டி, 'துணிவான முடிவு' என்ற தலைப்பில், இவ்வியாழனன்று வெளியானது.

லூத்தரன் சீர்திருத்த இயக்கம் உருவான காலத்தில், இருதரப்பினரும் மேற்கொண்ட வன்முறைகள் குறித்து நாம் மனம் வருந்தும் வேளையில், 2ம் வத்திக்கான் சங்கத்தைத் தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளாக, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் மேற்கொண்டு வரும் உரையாடல் முயற்சிகள் குறித்து மகிழ்வும் கொள்கிறோம் என்று Martin Junge அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முன் பணியாற்றிய திருத்தந்தையர், லூத்தரன் சமுதாயத்தை சந்தித்துள்ளனர் என்றாலும், லூத்தரன் சபையினர் மேற்கொள்ளும் ஒரு கொண்டாட்டத்தில், கத்தோலிக்கத் தலைவரான திருத்தந்தை கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பதால், திருத்தந்தை எடுத்துள்ள இந்த முடிவு, நம் ஒன்றிப்பு முயற்சிகளை உலகறியச் செய்வது உறுதி என்று, லூத்தரன் உலக அவையின் செயலர், Martin Junge அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.