2016-10-27 15:38:00

ஐ.நா. அமைதிப்படையின் பணிகளைப் பாராட்டும் திருப்பீடம்


அக்.27,2016. கட்டுக்கடங்காத பேராசையாலும் சுயநலத்தாலும் மோதல்கள் பெருகிவரும் இன்றைய உலகில், அமைதியையும் ஒப்புரவையும் வளர்க்க, ஐ.நா. அவையின் அமைதிப்படைகள் ஆற்றும் பணிகளை, திருப்பீடம் பாராட்டுகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் இப்புதனன்று நடைபெற்ற 71வது அமர்வில்,  ஐ.நா. அவையின் அமைதிப்படைகள் ஆற்றும் பணிகள் குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேளையில், ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்களின் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

1900களில் நடைபெற்ற மோதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5 விழுக்காடாக இருந்த நிலை மாறி, 1990களில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 90 விழுக்காடாக மாறியிருந்தது என்றும், இந்தக் கொடுமை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கருத்து வெளியிட்டார்.

கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில், பள்ளிகள், மருத்துவமனைகள், மக்கள் வாழும் குடியிருப்புக்கள் அனைத்தும், பெரும் அழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்திப்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அநீதி என்று, பேராயரின் கூற்று வெளியிட்டது.

சிறுவர், சிறுமியர், மற்றும், பெண்கள், பாலியல் ரீதியாகவும், இன்னும், பல வழிகளிலும் கொடுமைப்படுத்தப்படுவது, எழுதப்படாத நடைமுறையாக இருப்பது, மிகக் கொடுமையான நிலை என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், இந்தக் கொடுமைகள், ஒரு சில வேளைகளில் ஐ.நா. அமைதிப்படைகளாலும் நிகழ்த்தப்படுவது, ஐ.நா. அவையின் நம்பகத் தன்மைக்கு, பெரும் இழுக்காக அமைகிறது என்று சுட்டிக்காட்டினார்.

பேராயர் அவுசா அவர்களின் கருத்துக்களை, அவரது செயலர், அருள்பணி  Simon Kassas அவர்கள், 71வது அமர்வில் பகிர்ந்துகொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.