2016-10-27 16:03:00

ஈராக் நாட்டில், 2017, "அமைதியின் ஆண்டு" என சிறப்பிக்கப்படும்


அக்.27,2016. ஈராக் நாட்டில், 2017ம் ஆண்டு, "அமைதியின் ஆண்டு" என சிறப்பிக்கப்படும் என்று, அந்நாட்டில் பணியாற்றும் அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ, ஆர்த்தடாக்ஸ் சபையினரின் இணைந்த கூட்டம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஈராக் நாட்டின் மோசூல் நகரம் அடிப்படைவாதிகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு, அக்டோபர் 25, இச்செவ்வாயன்று எர்பில் நகரின் புறநகரான அங்காவாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு மேற்கொள்ளப்பட்ட வேளையில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்காவா நிரந்தர சகாய அன்னை மரியா ஆலயத்தில் இடம்பெற்ற இந்த செப வழிபாட்டில், அசீரிய சபையின் முதுபெரும் தந்தை, சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர், மற்றும், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ, ஆகியோர் கலந்துகொண்டனர் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

மோசூல் நகரை மீட்பதற்காக இணைந்துள்ள அனைத்து குழுவினருக்கும் நன்றி கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் நாடு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீண்டதும், அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில், அடுத்த ஆண்டினை, 'அமைதியின் ஆண்டாக' கொண்டாடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அனைவரும், அதனை ஒரு தீர்மானமாக வெளியிட்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.