2016-10-27 15:44:00

இறைவன் கண்ணீர் வடிக்கிறார் – திருத்தந்தையின் மறையுரை


அக்.27,2016. இன்று நிகழும் இயற்கை பேரிடர்கள் முன்பாகவும், "பணம் என்ற கடவுளை ஆராதிப்பதற்காக" உருவாக்கப்படும் போர்கள் முன்பாகவும், அங்கு உயிரிழக்கும் குழந்தைகள் முன்பாகவும் இறைவன் கண்ணீர் வடிக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை ஆற்றிய திருப்பலியில், நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையும், மத்திய இத்தாலியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தையும் மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

தன்னைக் கொல்ல விழையும் ஏரோது மன்னனை நரி என்று கடுமையான வார்த்தைகளால் கூறும் இயேசுவின் கவனம், எருசலேம் நகர் மீது திரும்பும்போது, கண்ணீர் விடுமளவு கனிவாக மாறுகிறது என்று, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

கண்ணீர் விடுவது, கடவுளின் இயல்பு என்று வலியுறுத்தியத் திருத்தந்தை, காணாமற்போன மகன் திரும்பி வந்த வேளையில் கண்ணீர் வடித்த தந்தை, இலாசர் கல்லறை முன் நின்று கண்ணீர் வடித்த இயேசு ஆகிய எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.

இயற்கைப் பேரிடர்களால் நிகழும் அழிவுகளைக் காணும் வேளையிலும், மனிதர்கள் உருவாக்கும் போர்களால் விளையும் கொடுமைகளைக் காணும் வேளையிலும், இறைவன் அழுகிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

பணம் என்ற பொய் தெய்வத்தை வழிபடுவோர் உருவாக்கும் கொலைக் கருவிகளால், அப்பாவி உயிர்கள் பலியாவது கண்டு, இறைவன் இன்று தொடர்ந்து அழுகிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.