2016-10-27 15:07:00

இது இரக்கத்தின் காலம் : ஒரு கருகிய ரொட்டி காயப்படுத்தாது


APJ அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்தபோது, ஒருநாள் இரவு வெகு நேரத்திற்குப் பின்னர் அவரது தாய் உணவு தயாரித்தார். ஏனென்றால் குடும்ப நிலைமையைச் சமாளிப்பதற்கு அவரது தாயும் வேலைக்குச் சென்று வந்தார். அன்று சமைத்த பிறகு, கருகிய ரொட்டி ஒன்றை அவரின் தந்தைக்குப் பரிமாறினார் தாய். ஆனால் அவரின் தந்தை எதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார். பின்னர், அவரின் தாய், கருகிய ரொட்டியைப் பரிமாறியதற்காக, தந்தையிடம் வருத்தம் தெரிவித்தார். அதற்கு அவரின் தந்தை, “எனக்கு கருகிய ரொட்டிதான் மிகவும் பிடிக்கும்” என்று பதில் சொன்னார். சாப்பிட்டு முடிந்ததும், அப்துல் கலாம் அவர்கள், தந்தையின் அருகில் மெதுவாகச் சென்று, இரவு வணக்கம் சொல்லிவிட்டு, “அப்பா, உங்களுக்கு உண்மையிலேயே கருகிய ரொட்டிதான் மிகவும் விருப்பமா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். சிறிதுநேரம் அமைதியாக இருந்த அவரின் தந்தை, பின்னர் இவ்வாறு பதில் சொன்னார்: “மகனே, உங்கள் அம்மா, தினமும் வேலைக்கும் சென்றுகொண்டு, நமக்கும் பணிவிடை செய்கிறார். களைத்துப்போய் இருப்பார். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை.. ஆனால், கடும் சொற்கள், கண்டிப்பாகக் காயப்படுத்தும். நான் ஒன்றும் சிறந்த மனிதன் இல்லை. ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன். நடப்பது எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு மகிழ்வான மனநிலைக்கு மாறவேண்டும் என்பதையே, இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டேன்.”

சிறந்த மனிதர்கள் உருவாவது பெற்றோரின் வளர்ப்பில் என்பது எவ்வளவு உண்மை!      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.