2016-10-26 15:10:00

மறைக்கல்வி: அந்நியர் மற்றும் ஆடையின்றி இருப்போர் மீது அக்கறை


அக்.,26,2016. உரோம் நகரில் குளிர் காலம் துவங்கியுள்ளபோதிலும் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து, கோடைக்காலத்திற்குரிய உணர்வைத் தந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் அவ்வப்போது மழையும் இலேசாக தூறிக்கொண்டுடிருக்கிறது. புதன் காலையும் மழை இலேசாக தூறினாலும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைக் கேட்க வந்த கூட்டத்திற்கு குறைவில்லை. மழைத் தூறலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, குடைகளைத் தாங்கியவர்களாக, விசுவாசிகள் கூட்டம் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க,  இறுதித் தீர்ப்பு பற்றிய தன் உரையில் இயேசு எடுத்திய‌ம்பிய இரக்கத்தின் செயல்களுள் இரண்டு குறித்து விளக்கமளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இடம்பெறும் நம் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக இன்று, 'அந்நியரை வரவேற்றல், ஆடையின்றி இருப்போருக்கு ஆடை அணிவித்தல்'  என்ற இரு இரக்க நடவடிக்கைகள் குறித்து நோக்குவோம். இறுதித் தீர்ப்பு பற்றிப் பேசும்போது, இந்த இரக்க நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு(மத்.25:35-36). இக்காலத்தில், 'அந்நியர்' என்பது, நம்மிடையே வாழும் குடிபெயர்ந்தோரைக் குறிப்பதாக உள்ளது. எல்லாக் காலத்திலும், குடிபெயர்தல் என்ற அந்த நிகழ்வு, நம் திறந்த மனப்பான்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அழைப்புவிடுப்பதாக உள்ளது. போராலும், பசிக்கொடுமையினாலும், மிகப்பெரும் ஏழ்மை நிலைகளாலும் நாட்டைவிட்டு, அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்நாட்களில்,  அவ்வாறு வரும் நம் சகோதர சகோதரிகளை வரவேற்று, அவர்கள்மீது அக்கறை செலுத்த நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கண்டுணர்ந்து, அவைகளை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதில் தாராள மனப்பான்மையுடன்கூடிய புது வழிகளைக் கண்டுகொள்வதில், புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி போன்று நமக்குமுன் சென்றுள்ள, அர்ப்பணத்துடன்கூடிய எண்ணற்ற கிறிஸ்தவர்களை நாம் பின்பற்றுவோம். ஆடையின்றி இருப்போருக்கு ஆடை அணிவித்தல் என்பது, தங்கள் மாண்பு முற்றிலுமாக தங்களிடமிருந்து உரியப்பட்டுள்ள மக்களின் மாண்பு காக்கப்பட்டு, உறுதிச் செய்யப்பட்டு, உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பதாக உள்ளது. கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், தேவையிலிருக்கும் மனிதர்களுக்கு நம் இதயங்களை மூடாதிருப்போமாக. நாம் மற்றவர்களுக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படும்போது, நம் வாழ்வு வளம் பெறுவதுடன், நம் சமூகங்களும் அமைதியைக் கொண்டாட வழிபிறப்பதோடு, இறைவனால் வழங்கப்பட்ட மாண்புக்கு இயைந்த வகையில், அனைத்து மக்களும் வாழவும் முடிகிறது.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.