2016-10-26 15:38:00

திருத்தந்தையின் "இறைவனின் பெயர் இரக்கம்" அரேபிய மொழியில்


அக்.26,2016. "அன்பு என்பது பொறுமையான ஒரு முயற்சி, மற்றவர்களுக்கு செவிகொடுக்கவும், அவர்களை நெருங்கிச் செல்லவும் இந்த முயற்சி உதவுகிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், "இறைவனின் பெயர் இரக்கம்" என்ற பெயரில் வெளியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நூல், அரேபிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில், அக்டோபர் 24, இத்திங்களன்று வெளியிடப்பட்டது.

ஜோர்டான் நாட்டு காரித்தாஸ் நிறுவனமும், ஜோர்டான் கத்தோலிக்க மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவில், ஜோர்டான் நாட்டு இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், Maroun Lahham, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை, முன்னாள் முதுபெரும் தந்தை, Fouad Twal, ஜோர்டான் நாட்டு, கலாச்சார அமைச்சர், Nabih Shuqum, மற்றும், ஏனைய மதத் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இன்றைய உலகை வதைக்கும் பல்வேறு சமுதாய நோய்கள் அனைத்தையும், இரக்கத்தின் உதவியால் குணமாக்க முடியும் என்பதை, திருத்தந்தையின் நூல் தெளிவாக்குகிறது என்று, கலாச்சார அமைச்சர் Shuqum அவர்கள், இவ்வெளியீட்டு விழாவில் கூறினார்.

வறுமைப்பட்ட திருஅவை, வறியோருக்கு பணியாற்றும் திருஅவை என்பதை அடிக்கடி கூறிவரும் திருத்தந்தை, உலகில் வளர்ந்துவரும் வன்முறைக்கு ஒரு மாற்றாக, 'இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்து, "இறைவனின் பெயர் இரக்கம்" என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் என்று, முன்னாள் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : VaticanInsider / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.