2016-10-26 15:49:00

சுவீடன் நாட்டில், கத்தோலிக்கர் எண்ணிக்கை கூடிவந்துள்ளது


அக்.26,2016. அக்டோபர் 31, வருகிற திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சுவீடன் நாட்டில், கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் திருத்தந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர் என்று, ஸ்டாக்ஹோம் (Stockholm) மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர், Anders Arborelius அவர்கள், ZENIT கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவீடன் நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணத் திட்டத்தில், அவர் பொதுவில்  திருப்பலி நிறைவேற்றுவது, முதலில் இடம்பெறவில்லை எனினும், பின்னர், அவர் கத்தோலிக்கர்களுக்கு திருப்பலி நிறைவேற்ற ஆவல் தெரிவித்ததை, தங்கள் நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என்று, ஆயர் Arborelius அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

உரோம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சுவீடன் நாட்டில் புராட்டஸ்டன்ட் சபையினர் வளர்ந்து வந்த காலம், மற்றும், Gustav Vasa என்ற அரசர் மேற்கொண்ட அடக்கு முறைகள் ஆகியவை காரணமாக ஒடுக்கப்பட்டிருந்த கத்தோலிக்க சமுதாயம், கடந்த சில ஆண்டுகளாக ஓரளவு சுதந்திரம் பெற்றுள்ளது என்றும், கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவந்துள்ளது என்றும் ஆயர் Arborelius அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதால், அண்மைய ஆண்டுகளில் கத்தோலிக்கர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்றும், தற்போது அந்நாட்டில் 1,15,000 க்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆயர் Arborelius அவர்கள் கூறினார்.

ஸ்டாக்ஹோல்ம் ஆயர் Anders Arborelius அவர்கள், சுவீடன் நாட்டில் பிறந்து, அங்கு ஆயராகப் பொறுப்பேற்றிருக்கும் முதல் ஆயர் என்பதும், அவர், கத்தோலிக்க மதத்திற்கு மாறி திருமுழுக்குப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.