2016-10-26 15:20:00

இரக்கத்தின் தூதர்கள் : இறைவனின் கனிவன்பின் கருவி


அக்.26,2016. “இறைவன் இருக்கிறார், அவர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார். எனது மருத்துவமனையின் வராந்தாக்களில், ஆறுதலின்றி, அமர்ந்திருக்கும் மக்களின் கண்களில் இறைவனைப் பார்க்கிறேன். இதுவே, இறைவனின் உண்மையான இல்லம். இறைவன்மீது நம்பிக்கையிழந்த மக்கள், அவரைக் கண்டுபிடிக்கும் இடம் இது. இறைவன் இருக்கிறார். நான் இத்தனை ஆண்டுகளாக, அவரைப் ஒதுக்கியதற்கு, அவரைப் புறக்கணித்ததற்கு, அவர் இல்லை என்று பொய் சொல்லியதற்கு, எனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், அவரிடம் செல்வதற்கு, அவர் என்னை மன்னிக்குமாறு செபிக்கிறேன். இறைவன்இரக்கமுள்ளவர், நன்மைத்தனம் மிக்கவர் மற்றும் அருள்நிறைந்தவர்”. இவ்வாறு எழுதியிருப்பவர், ஆப்கானிஸ்தான் நாட்டு நாவல் ஆசிரியரும், மருத்துவருமான Khaled Hosseini. இறைவன் எல்லையில்லா இரக்கமுள்ளவர் என்பதை, பலரும் தங்களின் அனுபவத்தால் சொல்கின்றனர். இறைவனின் அளவற்ற இரக்கத்தைச் சுவைத்தவர்கள், தாங்கள் பெற்றதை மற்றவருக்கும் வழங்கியுள்ளார்கள். அப்படிப்பட்ட தூயவர்களில் ஒருவர்தான் புனித ஜெனோவீவா தோரெஸ் மொராலெஸ் (Genoveva Torres Morales). இவர், இஸ்பெயின் நாட்டில், அல்மெனாரா என்ற ஊரில், 1870ம் ஆண்டு, சனவரி 3ம் நாள் பிறந்தார். ஆறு உடன்பிறப்புக்களைக் கொண்டிருந்த இவரே, குடும்பத்தில் கடைக்குட்டி. இவரின் எட்டாவது வயதில், பெற்றோரும், நான்கு சகோதர, சகோதரிகளும் இறந்தனர். எனவே, இவரும், இவரது சகோதரர் ஹோசேயும், கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவரின் சகோதரர், இவரிடம் கடுமையாக நடந்துகொண்டதால், சிறு வயதிலிருந்தே அன்பும், தோழமையும் கிடைக்காமல், தனிமையை அனுபவித்தார்.

புனித ஜெனோவீவா, தனது பத்தாவது வயதிலிருந்தே, ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை, மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து வந்தார். வாழ்வில், உண்மையான மகிழ்ச்சி, இறைவனின் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலே உள்ளது என்பதையும், இதற்காகவே நாம் ஒவ்வொருவரும் படைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உணர்ந்தார். இவரது வலது கால் தசை அழுகி, மரத்துப் போனதால், அது மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, வலது காலை எடுத்துவிட்டனர். அப்போது புனித ஜெனோவீவாவுக்கு   வயது 13. இந்த அறுவை சிகிச்சை வீட்டில் வைத்தே நடத்தப்பட்டது. மயக்கமருந்து போதிய அளவு கொடுக்கப்படாததால், கடும் வேதனையை இவர் அனுபவித்தார். இந்த அறுவை சிகிச்சையினால், இவர் தன் வாழ்நாள் முழுவதும், கடும் நோயையும், கடும் துன்பத்தையும் அனுபவித்தார். இதனால் புனித ஜெனோவீவா, எப்போதும், கைத்தடியைப் பயன்படுத்தினார். 1885ஆம் ஆண்டு முதல், 1894ஆம் ஆண்டுவரை, பிறரன்பின் கார்மேல் சபையினர் நடத்திய கருணை இல்லத்தில் இவர் வாழ்ந்தார். இந்த ஒன்பது ஆண்டுகால வாழ்வில், இவர், தனது ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தி, தையல் கலையையும் நன்றாகக் கற்றார். அச்சமயத்தில், இயேசு சபை அருள்பணியாளர் கார்லோஸ் ஃபெரிஸ் என்பவரால் வழிநடத்தப்பட்டார். இறைவனும், புனித ஜெனோவீவாவுக்கு, ஆன்மீகச் சுதந்திரத்தை அளித்திருந்தார். புனித ஜெனோவீவா, பிறரன்பின் கார்மேல் சபையில் சேர விரும்பினார். ஆனால், இவரது வலது கால் எடுக்கப்பட்டிருந்ததால், அச்சபையினர், அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், அருள்சகோதரியாக ஆக வேண்டுமென்ற ஆவல் இருந்ததால், இறைவனின் வழிநடத்தலுக்குத் தன்னை அர்ப்பணித்தார்.

 

புனித ஜெனோவீவா, 1894ஆம் ஆண்டில், பிறரன்பின் கார்மேல் சபையினரின் கருணை இல்லத்திலிருந்து வெளியேறி, இரு பெண்களோடு வாழத் தொடங்கினார். இவர்கள் தங்கள் உழைப்பால், ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக வாழத் தொடங்கினர். அதோடு, தனிமை மற்றும் ஏழ்மை வாழ்வையும் இவர்கள் மூவரும் வாழ்ந்தனர். அக்காலத்தில், ஏராளமான ஏழைப் பெண்கள், வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். அதனால்,     1911ம் ஆண்டில், வலென்சியா பேராலயத்திலிருந்த பார்பரோஸ்(Canon Barbarrós) என்பவர், புனித ஜெனோவீவாவிடம், இப்பெண்களுக்கென ஒரு புதிய துறவு சபையைத் தொடங்கச் சொன்னார். வேலைவாய்ப்பின்றி மிகவும் துன்புறும் இந்த ஏழைப் பெண்களுக்கென ஒரு துறவு சபையை ஆரம்பிக்க வேண்டுமென, புனித ஜெனோவீவாவும் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் ஒன்றாய்க் கூடிவரவே, வலென்சியாவில், புதிய சபையைத் தொடங்கினார் புனித ஜெனோவீவா. இயேசுவின் திருஇதயம் மற்றும் திருத்தூதர்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இச்சபையில், குறுகிய காலத்திலே, மற்ற பெண்களும் சேர்ந்தனர். இதனால், பல தடைகள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், இஸ்பெயினின் பிற பகுதிகளிலும், இச்சபை விரைவில் பரவியது.

புனித ஜெனோவீவாவின் கடும் பணிகள், உடல் வேதனையை அதிகரித்தன. ஆயினும், இவை, இவரின் பணிகளுக்குத் தடையாக இல்லை. "நான் கடும் துன்பம் அனுபவித்தாலும், இறைவனின் இரக்கத்திற்கு நன்றி சொல்கிறேன். நான் துணிச்சலை மட்டும் இழக்கமாட்டேன்" என்று, இவர் சொல்வாராம். பரிவன்பு, திறந்தமனம், நகைச்சுவை போன்ற பண்புகளில் இப்புனிதர் சிறந்து விளங்கினார். 1956ம் ஆண்டு சனவரி 5ம் தேதி இறந்த புனித ஜெனோவீவா, 1995ம் ஆண்டு சனவரி 29ம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார். அப்போது, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், புனித ஜெனோவீவா “இறைவனின் கனிவன்பின் கருவி” என்றார்.

“இரக்கத்தின் கனிகள் நீதியைவிட சிறந்தவை” என்றார் ஆபிரகாம் லிங்கன். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இரக்கப் பண்பில் வளர்ந்து, இரக்கச் செயல்களில் நம்மை ஈடுபடுத்துவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.