2016-10-26 16:01:00

500 ஆண்டுகளில், இணைந்து கொண்டாடும் முதல் தருணம்


அக்.26,2016. லூத்தரன் சீர்திருத்தம் துவங்கியதன் 5ம் நூற்றாண்டு நிறைவுதான், முதன் முறையாக, கத்தோலிக்கரும் லூத்தரன் சபையினரும் கரம் கோர்த்து, ஒரே பக்கம் இருந்து கொண்டாடும் முதல் தருணம் என்று, இத்தாலியின் லூத்தரன் சபை தலைவர், Heiner Bludau அவர்கள் கூறினார்.

அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவீடன் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, லூத்தரன் சபை தலைவர், Bludau அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், இதுவரை லூத்தரன் சபையினர் கொண்டாடிவந்த நூற்றாண்டு நிறைவுகள், கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரணியில் இருந்த உணர்வைத் தந்தது என்று கூறினார்.

தற்போது நிலவும் இந்த உரையாடல் சூழலை உருவாக்க கத்தோலிக்கர்களும், லூத்தரன் சபையினரும் அயராது உழைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட Bludau அவர்கள், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க, உரையாடல் எவ்விதம் உதவும் என்பதற்கு, இந்த 5ம் நூற்றாண்டு கொண்டாட்டம், சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

கத்தோலிக்கர்களும் லூத்தரன் சபையினரும் இணைந்து திருப்பலி கொண்டாடும் நிலை உருவாகும்போது, நமது ஒன்றிப்பு இன்னும் முழுமையடையும் என்று தன் பேட்டியில் கூறிய Bludau அவர்கள், அந்த நிறைவு நாளை நோக்கி, இருவரும் உழைப்பதற்கு, திருத்தந்தையின் பயணம் ஓர் ஆரம்பமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.