2016-10-25 15:03:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 45


Hang glider என்ற கருவியின் உதவிகொண்டு பறந்த அனுபவம் நம்மில் பலருக்குக் கிடைத்திருக்காது. அப்படி பறந்துசெல்வோரை ‘வீடியோ’க்களில் பார்த்திருக்கிறோம். அவ்வாறு பறந்துசெல்பவர்கள், தரையிறங்கும்போது, அதிக கவனமாக இறங்க வேண்டும், இல்லையேல் விபத்துக்கள் நேர வாய்ப்புண்டு. காற்றில் மிதந்து வந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து, தரையில் சிறிது நேரம் ஓடி, பின்னரே நிற்க வேண்டும். தரையைத் தொட்டதும், நிற்க முயன்றால், கால் பிசகிப்போக, அல்லது உடைந்தும் போக வாய்ப்பு உண்டு.

உடலால் காற்றில் மிதக்க முடியாவிடினும், பல நேரங்களில், கற்பனைக் குதிரையில், அல்லது, கனவுத் தேரில் ஏறி, மேகங்களில் மிதந்து வந்திருக்கிறோம். அந்நேரங்களில், வாழ்க்கையின் எதார்த்தம், திடீரென, நம்மைத் தரையிறக்கியபோது, அதிர்ச்சி அடைந்திருக்கிறோம்.

பறக்கும் அனுபவம் பற்றி, விவிலியத் தேடலில் ஏன் இன்று பேசுகிறோம் என்ற கேள்வி எழலாம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு புதுமையில், நம் விவிலியத் தேடல் இன்று துவங்குகிறது. 'தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல்' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள இப்புதுமை, (மத். 17:14-20; மாற். 9:14-27; லூக். 9:37-43அ) இயேசுவின் 'தோற்ற மாற்றம்' என்ற நிகழ்வைத் தொடர்ந்து, மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இப்புதுமையின் ஆரம்பச் சூழல், திடீரென தரையிறங்கியதைப் போன்ற ஓர் அனுபவத்தை, இயேசுவுக்கும், அவரது சீடர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்.

தோற்றம் மாறிய நிகழ்வு முடிந்து, இயேசு, மூன்று சீடர்களுடன் மலையிலிருந்து இறங்கி வந்தார். மலைமீது, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், ஒரு தெய்வீக அனுபவத்தைச் சுவைத்தபின், தரைக்கு வந்ததும், ஓர் இறுக்கமானச் சூழல் அவர்களை எதிர்கொண்டது. நற்செய்தியாளர் மாற்கு, இச்சூழலை, இவ்விதம் விவரிக்கிறார்:

மாற்கு 9:14-16

அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

இறுக்கமான இச்சூழலை ஆய்வு செய்வது, நமக்கு சில பாடங்களைக் கற்றுத்தர இயலும். இயேசுவுடன் பலமுறை வாதாடி, ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்திருந்த மறைநூல் அறிஞர்கள், இயேசு இல்லாத வேளையில், சீடர்களுடன் வாதாட ஆரம்பித்தனர். அந்த வாதம் ஏன் எழுந்தது என்று இயேசு கேட்டபோது, மனம் நொந்திருந்த ஒரு தந்தை, நோயினால் துன்புற்ற தன் மகனைப்பற்றி இயேசுவிடம் கூறுகிறார். அவர் விவரிக்கும் சொற்களைக் கொண்டு பார்த்தால், அச்சிறுவனுக்கு உள்ளது வலிப்பு நோய் என்பதை நாம் உணரலாம்.

பல விவிலிய ஆய்வாளர்கள் கூறும் விளக்கங்களின்படி, அச்சிறுவனுக்கு 12 அல்லது 13 வயதிருக்கலாம். வளர் இளம் பருவத்தில், வலிப்பு நோயினால் துன்புறும் தன் மகனைக் கண்டு, அந்தத் தந்தை எவ்வளவு மனவேதனை அடைந்திருக்க வேண்டும்!

ஆறில் சாகலாம், நூறில் சாகலாம், ஆனால் இளமையில் சாவது கொடுமை என்ற வரிகளை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இளமை என்பது வாழ்வதற்கு... அந்த இளமைப் பருவத்தில் தீராத நோயுற்றிருக்கும் மகனையோ, மகளையோ காப்பதற்கு, பெற்றோர் மேற்கொள்ளும் போராட்டங்களை அறிவோம். அதேபோல், இளம் பருவத்தில், தவறானப் பழக்கங்களுக்கு அடிமையாகி, குறிப்பாக, போதைப்பொருள் போன்ற கொடிய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதனால் உடல் நலத்தை இழந்துவிடும் இளையோரையும், அவர்களுக்கு மறுவாழ்வு தருவதற்குப் போராடும் பெற்றோரையும் பற்றி சிந்திக்க, இந்தப் புதுமை நம்மை அழைக்கிறது. வலிப்பு நோயுடன் போராடும் ஒரு சிறுவனையும், அவனைக் காப்பாற்றப் போராடும் அவனது தந்தையையும் இந்தப் புதுமையில் சந்திக்கிறோம்.

மாற்கு 9:17-18

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை” என்று கூறினார்.

குழந்தைகள் பிறப்பதென்னவோ ஒரு தாயின் உதரத்தில்தான். ஆனால், அர்த்தமற்ற காரணங்களுக்காய், ஆயிரமாயிரம் குழந்தைகள், குப்பைத் தொட்டியிலும், அனாதை இல்ல வாசல்களிலும், கோவில் முகப்புகளிலும் விடப்படுவது, இன்றும் நடக்கும் ஒரு கொடுமை. இக்குழந்தைகள் ஆதரவின்றி விடப்படுவதற்குச் சொல்லப்படும் ஒரு முக்கியக் காரணம், பிறக்கும்போதே ஏதோவொரு குறையோடு குழந்தை பிறப்பது.

குறையோடு பிறந்த ஒரு குழந்தையை யூத சமுதாயத்தில் வளர்ப்பது என்பது, மிகவும் கடினமான ஒரு சவால். எந்த ஒரு நோயும், உடல் குறையும், கடவுளின் சாபம் என்று தப்புக்கணக்கு போட்டு வந்த யூத சமுதாயத்தில், உறவினர், நண்பர்கள், ஊரார் என்று பலரும் சொன்ன பழிச் சொற்கள், அந்த சிறுவனின் பெற்றோரை, ஒவ்வொரு நாளும், வதைத்திருக்க வேண்டும்.

மேலும், குறையோடு பிறக்கும் குழந்தைகள், பெற்றோர் செய்த பாவங்களுக்குக் கிடைத்த ஒரு தண்டனை என்பதும், யூத சமுதாயத்தில் நிலவி வந்த ஓர் எண்ணம் என்பதை, நாம் யோவான் நற்செய்தியில் காண்கிறோம். யோவான் நற்செய்தி 9ம் பிரிவின் ஆரம்ப வரிகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றன:

யோவான் 9:1-3

இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்றார்.

இவ்வாறு, தன்னையும், தன் மகனையும் இறைவனின் சாபம் பெற்ற பாவிகள் என்று குறை கூறிவந்த அந்த யூத சமுதாயத்தின் பழிச்சொற்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, குறையோடு பிறந்த தன் மகனை வளர்க்க, அச்சிறுவனின் பெற்றோர் அதிகம் போராடியிருக்கவேண்டும்.

இந்தப் போராட்டங்களுக்குத் தீர்வாக, அச்சிறுவனின் தந்தை, சீடர்களின் செபங்களை நாடுகிறார். சீடர்கள் மேற்கொண்ட செப முயற்சி பலனளிக்கவில்லை. இதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், ஒரு வாதத்தைத் துவக்குகின்றனர். இதே மறைநூல் அறிஞர்கள், அத்தந்தையையும், மகனையும் பாவிகள் என்று பலமுறை தீர்ப்பு எழுதி, முத்திரை குத்தியிருக்கவேண்டும். எனவே, அத்தந்தை இயேசுவின் சீடர்களிடம் துணைவேண்டி விண்ணப்பித்ததை, அவர்கள் ஏற்கனவே எள்ளி நகையாடியிருக்க வேண்டும். அவர்கள் எண்ணியபடியே, சீடர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போனதும், மறைநூல் அறிஞர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட, ஒரு விவாதத்தை சீடர்களுடன் துவக்கியிருக்க வேண்டும்.

இத்தகையைச் சூழலில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். அங்கு நிலவியச் சூழலையும், சிறுவனின் தந்தை கூறிய விளக்கத்தையும் கேட்ட இயேசு, மனம் நொந்து பேசியதை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

மாற்கு 9:19

இயேசு அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்.

இயேசு, மலையிலிருந்து இறங்கிவந்ததும், அங்கு, சீடர்கள், மக்கள், மறைநூல் அறிஞர்கள் என்ற மூன்று குழுவினர் நின்றதை நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். எனவே, நாம் வாசித்த இப்பகுதியில், இயேசு 'அவர்களிடம்' கூறினார் என்று மாற்கு குறிப்பிட்டிருப்பது யாரைப்பற்றி என்ற கேள்வி எழுகிறது. இதைக் குறித்து, சில விவிலிய ஆய்வாளர்கள் விளக்கும்போது, 'அவர்கள்' என்பது, நோயைக் குணமாக்க முடியாத சீடர்களாக இருக்கலாம்; அல்லது, அவர்களுடன் வாதத்தில் ஈடுபட்டிருந்த மறைநூல் அறிஞர்களாக இருக்கலாம்; அல்லது, பொதுவாக, அங்கு நின்றுகொண்டிருந்த அனைத்து மக்களாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இயேசுவின் சொற்கள், வேதனையையும், சலிப்பையும் வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து அவர் அங்கு ஆற்றிய புதுமை, சிறுவனை மட்டும் குணமாக்கவில்லை, மாறாக, அச்சிறுவனின் தந்தையையும் முழுமையாகக் குணமாக்கியது. இப்புதுமை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை அடுத்தத் தேடலில் கற்றுக்கொள்ள முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.