2016-10-25 15:22:00

தீபாவளிச் செய்தி:குடும்பங்கள்,நம்பிக்கையின் கல்விக்கூடங்கள்


அக்.25,2016. குடும்பங்கள், நம்பிக்கையின் கல்விக்கூடங்களாக மாறுவதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளது.

அக்டோபர் 30, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலகின் அனைத்து இந்துசமய சகோதரர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, வருங்கால மனித சமுதாயம், இக்காலக் குடும்பங்களின் உறுதியான தன்மையைப் பொறுத்தே அமையும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.

மனித சமுதாயத்தின் முதல் கல்விக்கூடம் குடும்பம் எனவும், பெற்றோரே, தங்கள் பிள்ளைகளின் முதலும், முக்கியமுமான ஆசிரியர்கள் எனவும் கூறியுள்ள அச்செய்தி, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் வயதானவர்களின் சிறந்த எடுத்துக்காட்டான வாழ்வால் வழிநடத்தப்பட்டு, சிறந்த விழுமியங்களில் உருவாக்கப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளது.

ஆயினும், நம் இளையோரின் நம்பிக்கையும், கருத்தியல்களும், சூழ்நிலைகளால் அடிக்கடிப் பாதிக்கப்படுவதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி வழிநடத்திச் செல்வதற்கு, அவர்களில் நம்பிக்கையுணர்வை ஊட்ட வேண்டுமென்றும், அச்செய்தி பரிந்துரைக்கின்றது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு, நம்பிக்கையில், நல்ல பயிற்சியையும், கல்வியையும் வழங்குமாறும் கூறியுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இத்தகைய கல்வி, இளையோரை ஊக்குவித்து, அவர்கள், பிறரன்பிலும், சேவையிலும் வளரவும், பிறரின் தேவைகளை உணர்ந்துகொள்ளவும், இருளில் வாழ்வோர்க்கு ஒளியாக மாறவும் உதவும் என்று கூறியுள்ளது.

இவ்வாறு, குடும்பங்கள், நம்பிக்கையின் பயிற்சிப் பாசறையாக அமைகின்றன என்றும், மனித சமுதாயம், அமைதியில் வாழ்ந்து வளம்பெற வேண்டுமெனில், குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும் என்றும்,  திருமணத்தையும், குடும்ப வாழ்வையும் ஆதரிப்பதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நல்மனம் கொண்ட எல்லாருடன் சேர்ந்து செயல்படுவோம் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது.

“கிறிஸ்தவர்களும், இந்துக்களும்:குடும்பங்கள் மத்தியில் நம்பிக்கையை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்டுள்ள, தீபாவளி வாழ்த்துச் செய்தியில், அவ்வவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.