2016-10-24 15:30:00

வாரம் ஓர் அலசல்– தன்னிடம் இருப்பதைத்தானே கொடுக்க முடியும்!


அக்.24,2016. அது 1989ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி. அன்று நடந்தது ஒரு மகிழ்வான விடயம். பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நாள் அது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், ஒரே நாடாக இருந்த ஜெர்மனி, அப்போருக்குப் பின்னர், மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என, இரண்டாகப் பிரித்திருந்த சுவர் அது. இவ்விரண்டு ஜெர்மனிகளையும் பிரிப்பதற்கு, இடையில், முதலில் ஒரு முள்கம்பி வேலியையும், அதற்குப் பின்னர், நான்கு அடி அகலம், பதினைந்து அடி உயரம், 165 கி.மீட்டர் நீளத்துக்கு, மெகா கான்கிரீட் சுவரையும் எழுப்பினார்கள். அந்தச் சுவர், ஜெர்மனியின் தலைநகரான பெர்லினையும் இரண்டாகப் பிரித்தது. அந்த பெர்லின் சுவரைத்தான், ஏறக்குறைய இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு நாடுகளின் மக்களும் சேர்ந்து உடைத்துத் தகர்த்தார்கள்.

பெர்லின் சுவர் இருந்தபோது, அந்த எல்லையை யாரும் தாண்டிச் செல்லாமல் கண்காணிக்க, பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். குறிப்பாக, மேற்கு ஜெர்மனியிலிருந்து யாரும் கிழக்கு ஜெர்மனிக்கு வந்துவிடாமலும், அங்கே மலிவு விலையில் விற்கப்பட்ட கோதுமை போன்ற உணவுப் பொருள்களை, மேற்கு ஜெர்மனி மக்கள் வாங்கிக்கொண்டு போகாமலும் கண்காணிப்பதே பாதுகாப்பு வீரர்களின் வேலை. ஆனால், மேற்கு ஜெர்மானியர்களின் கருத்து மாறுபட்டிருந்தது. இந்தப் பிரிவினைச் சுவர், சகோதரர்களைப் பிரித்து வைக்கும் அவமானச் சுவர் என்று நினைத்தனர். கிழக்கு ஜெர்மனி மக்களுக்கும் இதே கருத்து இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், சோவியத் ரஷ்யாவின் பிடியில் இருந்ததால், அதை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள், கிழக்கு பெர்லின் மக்களில் சிலர், நிறையக் குப்பைகளைக் கொண்டுபோய், பெர்லின் சுவருக்கு அப்பால், மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டுப் போனார்கள். இதற்கு, மேற்கு ஜெர்மனி மக்கள் செய்துள்ள காரியம்தான் நம்மை வியக்க வைத்துள்ளது. மேற்கு ஜெர்மனி மக்கள், ஒரு லாரி நிறைய ரொட்டிகள், பழங்கள், மளிகைப் பொருள்களையெல்லாம் எடுத்துவந்து, அழகாக, பெர்லின் சுவர் மேல் அடுக்கி, குப்பையைப் போட்டவர்களுக்கு ஒரு செய்தியையும் எழுதி வைத்தார்கள். ‘தன்னிடம் உள்ளதையே ஒருவன் மற்றவர்களுக்குக் கொடுப்பான்’என்று, ஓர் அட்டையில எழுதி வைத்துவிட்டுப் போனார்கள்.

அன்பர்களே, ஒருவர், தன்னிடம் உள்ளதையே மற்றவர்களுக்குக் கொடுப்பார்’. சிந்திக்க வேண்டிய கூற்று இது. கிழக்கு பெர்லினில் குப்பை கொட்டியவர்களைத் திருத்துவதற்காக எழுதப்பட்டதாக இது இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதரும் தன்னிடம் இருப்பதைத்தானே மற்றவர்க்குக் கொடுக்க முடியும் என்பதுதான் உண்மை! நல்ல பண்புகளைக் கொண்டிருப்பவர், அப்பண்புகளைத்தானே மற்றவரிடம் வெளிப்படுத்துவார்! உள்ளொன்று வைத்து, புறமொன்று நடிக்கும் கூட்டமும் உண்டு. ஆனால் உண்மைநிலை எப்படியும் ஒருநாள் வெளிப்பட்டுவிடும். அது இருக்கட்டும்.  இப்போது நாம் நல்லதைப் பேசுவோம். காவிரி நீர் பங்கீடுப் பிரச்சனை முடிந்த கதை அல்ல. ஆனால், அப்பிரச்சனை ஆரம்பித்த நாள்களில், அடுத்த மாநிலத்தவர், காரணமே இல்லாமல், எதிரே தென்படும் தமிழர்களை அடித்து உதைத்தார்கள், மேலும் பல வன்முறைகள். அதற்குப் பழிக்குப்பழி செயல்களும் நடக்காமல் இல்லை. அப்பா வயதிலிருக்கும் சோணமுத்து என்ற லாரி டிரைவரை, ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இப்படி அடிவாங்கி அவமானமடைந்த சோணமுத்து அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார். “பெங்களூருவில் எனக்கு நேர்ந்த இந்தக் கதி, இங்கே வரும் கன்னட டிரைவர்களுக்கு நேரக் கூடாது”. சோணமுத்து அவர்களுக்கு என்ன பரந்த, விரிந்த உள்ளம்!  ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’என, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடலின் முதல் வரிக்கு, சோணமுத்து போன்ற உயர்ந்த உள்ளங்கள், இலக்கணமாக விளங்குகிறார்கள். சோணமுத்துக்கள் வாழ்க.

ஒருவர், தன்னிடம் உள்ளதையே மற்றவர்களுக்குக் கொடுப்பார். அன்பர்களே, நம் APJ அப்துல் கலாம் அவர்களின் நற்பண்புகளை வியக்காதவர்களே இல்லை. இரமதான் மாதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், இஃப்தார் விருந்து நடத்துவது மரபு. ஆனால், அப்துல் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில் இஃப்தார் விருந்து நடத்தப்படவில்லையாம். இதற்கான காரணம் என்ன என்று, அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் அவர்கள், “கலாம் எபெக்ட்( Kalam Effect)” என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். நாயர் அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்...

கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னை அழைத்த அப்துல் கலாம் அவர்கள், இஃப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். 22 இலட்சம் ரூபாய் செலவழிப்போம் என்று நான் சொன்னேன். அதற்கு ஐயா அவர்கள், ஏற்கனவே, உணவு கிடைத்து வாழ்பவர்களுக்கு இஃப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 இலட்சத்தை, கருணை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம் என்றார். பின்னர், அந்தத் தொகைக்கு இணையாக, சில கருணை இல்லங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள குழந்தைகளுக்குத் தேவையான உணவு, ஆடைகள், மற்றும் விரிப்புகளை, வழங்க ஏற்பாடு செய்யச் சொன்னார். இப்படி, இல்லங்களைத் தேர்ந்தெடுத்த வேலையையும் அந்தப் ராஸ்டிரபதி பவனிலுள்ள ஒரு குழுவே செய்தது. இதில் கலாம் ஐயா அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. பின்னர், தனியாக என்னை அழைத்து, தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய்க்கும் காசோலை அளித்து, இதையும் சேர்த்து 23 இலட்சம் ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும், அப்துல் கலாம் அவர்கள் கூறினார். ஆனால், நானோ, ஐயா, நான் இதை மக்களிடம் சொல்வேன், இங்கு ஒரு மனிதர், செலவழித்திருக்கவேண்டிய பணத்தை மட்டுமல்லமால், தனது சொந்தப் பணத்தையும் கொடுத்தார் என்று, மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்துல் கலாம் அவர்கள் இஸ்லாமியர்தான் என்றாலும், அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தவரை குடியரசு தலைவர் மாளிகையில், ‘இப்தார்’ விருந்து அளிக்கப்பட்டதில்லை. இத்தகைய மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன்.

அப்துல் கலாம் அவர்களின் ஐந்து ஆண்டு காலம் பதவி முடிந்த பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரைச் சந்தித்தேன். என்ன மிஸ்டர்.நாயர், உங்கள் மனைவியைக் காணோம்? என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்று சொன்னேன். அடுத்த நாள் எனது வீட்டைச் சுற்றி, ஒரே காவல்துறையினர். என்னவென்று பார்த்தால் கலாம் அவர்கள், எனது மனைவியைப் பார்க்க வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின், மனைவியைச் சந்தித்து பேசுகிறாரே என்று, நான் வியந்து போனேன்.” இவ்வாறு தனது அனுபவத்தை எழுதியுள்ளார் பி.எம்.நாயர். அன்பு இதயங்களே, நல்ல மரம் நல்ல கனியையே கொடுக்கும். நல்ல மனிதர்களிடமிருந்து நல்ல பண்புகளே வெளிப்படும்.

அக்டோபர் 24, இத்திங்கள், ஐக்கிய நாடுகள் தினம். மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனம், இத்திங்களன்று, ஆயுதக் களைவு வாரம்(அக்.24-30) என்ற, ஒரு நிகழ்வைத் தொடங்கியுள்ளது. உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், ஈராக்கில் மொசூல் நகரில் கடுமையான போர். சிரியாவில், மூன்று நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. ஏமனில் அமல்படுத்தப்பட்ட, மூன்று நாள் போர் நிறுத்தம் முடிவடைந்த சில மணி நேரங்களில், செளதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஏமன் தலைநகரான சனாவில் வான்வழி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இவையெல்லாம் இஞ்ஞாயிறு செய்திகள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், ஈராக்கில், குறிப்பாக, மொசூல் நகரில், அப்பாவி குடிமக்களுக்கு எதிராக, நீண்ட காலமாக இடம்பெற்றுவரும், வெறுக்கத்தக்க, கொடூர வன்செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நம்பிக்கையும், ஒப்புரவும் ஏற்பட விண்ணப்பித்தார், அதற்காக, வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய எண்பதாயிரம் விசுவாசிகளோடு சேர்ந்து செபித்தார். அங்கு இடம்பெறும் வன்முறைகள், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அவை கண்ணீர் சிந்த வைக்கின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர், தன்னிடம் உள்ளதையே மற்றவர்களுக்குக் கொடுப்பார். ஒருநாள், ஒருவர் உச்சி வெயிலில், மரத்தடியில், நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவரைப் பார்த்து, “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும், உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறார் என நினைத்துக் கொண்டே சென்றார். அடுத்து, அவ்வழியாக வந்த திருடன் ஒருவன், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான்போலத் தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டதுபோல் தூங்குகிறான்“என நினைத்துக்கொண்டே சென்றான். அடுத்து வந்த குடிகாரன் ஒருவன், “காலையிலேயே நன்றாகக் குடித்திருக்கிறான், அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் அவ்வழியாக வந்த துறவி ஒருவர், நண்பகலில் இப்படி உறங்கும் இவர், முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும், வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்”என அவரை வணங்கிவிட்டுச் சென்றாராம். அன்பு இதயங்களே, இது கதைதான் என்றாலும், நாம் எப்படியோ அவ்வாறே நம் எண்ணங்களும் என்ற உயரிய பாடத்தை நமக்கு உணர்த்துகின்றது. எனவே, நல்ல பண்புகளால் நம்மை நிறைப்போம். நம் எண்ணங்கள் சிறந்திருந்தால், நம் வாழ்வும் சிறக்கும். வாழ்வு சிறந்திருந்தால், நம்மைச் சுற்றியுள்ள அனைவரும், அனைத்தும் சிறக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.