2016-10-24 16:30:00

மறைப்பணி வெற்றிகள், நம் முயற்சிகள்,இறையருளைச் சார்ந்துள்ளன


அக்.24,2016. மறைப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், அதன் பலன்கள் அனைத்தும் நம் முயற்சிகளைச் சார்ந்திருக்கின்றன என்பதை எண்ணும் அதேவேளை, அந்த முயற்சிகளின் வெற்றி என்பது, இறைவனின் கொடை என்பதையும், தூய ஆவியாரின் செயல்பாடு என்பதையும் மறந்துவிடக்கூடாது என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைபரப்புப்பணி ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு  நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளைய திருப்பலி இரண்டாம் வாசகத்தில், தூய பவுல் தன் பணிகள் பற்றி திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறும் வார்த்தைகளை மேற்கோள்காட்டி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

"பணியாற்ற அனுப்பப்படுவோரின் திருஅவை, இரக்கத்தின் சாட்சி" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்ட மறைப்பணி ஞாயிறன்று, திருத்தந்தை வழங்கிய உரையில், நம் மறைப்பணிகள் பயனுடையதாக மாறுவதற்கு, இறைவனின் இருப்பேக் காரணம் என்பதை, தூய பவுலைப் பார்த்து அக்காலக் கிறிஸ்தவர்கள் கற்றுக்கொண்டனர் எனக் கூறினார்.

இன்றைய உலகின் பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவரும் மன உறுதியுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

எச்சூழலிலும் திறந்த மனதுடையவர்களாகவும், தீவிரப்போக்குகளை பின்பற்றாதவர்களாகவும், இஞ்ஞாயிறு நற்செய்தி காட்டும் வரிதண்டுபவரைப்போல் தாழ்ச்சியுடனும் செயல்படுவோம் என்ற  அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.