2016-10-24 14:38:00

இது இரக்கத்தின் காலம் : பிறர் உழைப்பில் வாழ நினைப்பது இழிவு


இளைஞன் ஒருவன், ஞானி ஒருவரிடம் சென்று, ஐயா, இந்த ஊரில் எனக்கு வருமானத்திற்கு வழியில்லை, அதனால், இன்று நான் ஊரிலிருந்து புறப்படுகிறேன், நான் செல்லும் நகரத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து, அங்கு என் வாழ்வு நன்கு அமைய வேண்டுமென்று, என்னை ஆசீர்வதியுங்கள் என்று வேண்டினான். ஞானியும் அவனை ஆசீர்வதித்தார். சில நாள்களுக்குப் பிறகு, ஞானி, அதே ஊரில் அந்த இளைஞனைப் பார்த்தார். ஏப்பா, நீ எங்கேயோ பிழைக்கச் செல்வதாகச் சொன்னாயே என்றார். ஆம் ஐயா, அன்றே நான் புறப்பட்டுவிட்டேன். சென்ற வழியில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தேன். அங்கே ஒரு காட்சியைக் கண்டேன். தூரத்தில் ஒரு மரத்தடியில், கால் ஒடிந்த சிட்டுக்குருவி ஒன்று, நடக்க முடியாமல், பசியாலும் வலியாலும் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது நான், இந்தக் குருவிக்கு, தானாகச் சென்று உணவு தேட முடியவில்லை, எப்படி இதனால் உயிர் வாழ முடியும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். அந்நேரத்தில், எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு சிட்டுக்குருவி, தன் வாயில் உணவைக் கொண்டுவந்து, கால் ஒடிந்திருந்த சிட்டுக்குருவிக்கு ஊட்டியது.  ஆஹா, இந்தக் குருவிக்கு உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த இறைவன், மனிதனாகிய எனக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யமாட்டாரா என்று நினைத்து, அங்கிருந்தே ஊருக்குத் திரும்பிவிட்டேன் என்றான் இளைஞன். இதைக் கேட்ட ஞானி, தம்பி, நீ ஏன் கால் ஒடிந்த சிட்டுக்குருவியாக இருக்க ஆசைப்படுகிறாய்? தன் உழைப்பில் தானும் உண்டு, அடுத்த குருவிக்கும் உணவு கொண்டுவந்து கொடுத்த அந்தப் பெருமைக்குரிய சிட்டுக்குருவியாக இருக்க வேண்டுமென்று, நீ ஏன் விரும்பக் கூடாது? என்று கேட்டார். ஆம். பிறர் உழைப்பில் வாழ்வதும், வாழ நினைப்பதும் இழிவு. உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது(2தெச.3,10)என்று, திருத்தூதர் புனித பவுல் கூறியுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.