2016-10-22 15:08:00

யூபிலி மறைக்கல்வியுரை : இரக்கமும் உரையாடலும்


அக்.22,2016. அன்பு இதயங்களே, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய, சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரையைக் கேட்பதற்காக, பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகள் கூடியிருந்தனர். போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டை முன்னிட்டு, நன்றிகூறும் விதமாக, உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்ட பெருமளவான போலந்து கத்தோலிக்கரும், ஆயர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டது ஒரு காரணமாகும். இயேசு சமாரியப் பெண்ணோடு உரையாடிய நற்செய்திப் பகுதி, பல மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது. பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புச் சகோதர, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் எனது காலை வணக்கம். தூய யோவான் நற்செய்தியிலிருந்து(cfrயோவா.4.6-15) நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி பகுதி, இயேசு, சமாரியப் பெண்ணோடு நடத்திய சந்திப்பு பற்றி விளக்குகிறது என்று, இத்தாலியத்தில், முதலில், யூபிலி பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைவனின் இரக்கம் பற்றியும், இயேசுவைப் பின்செல்பவர்களாக, இறைத்தந்தையைப் போன்று, இரக்கமுள்ளவர்களாக, வாழவேண்டிய நம் பொறுப்புணர்வு பற்றியும், நாம் சிந்தித்து வருகிறோம். இந்த ஓர் ஒளியில், இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி, இப்போது, நம் சிந்தனைகளைத் திருப்புவோம். இந்த உரையாடல் வழியாக, நாம் பிறரை அறியவும், மதிக்கவும், ஒவ்வொரு மனிதரும், கடவுளின் கொடை என நோக்கவும் உண்மையிலேயே நாம் கற்றுக்கொள்கிறோம். நம் குடும்பங்களிலும், நம் பள்ளிகளிலும், நம் பணியிடங்களிலும், உரையாடலை ஊக்குவிக்க வேண்டியது எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகின்றது! ஏனென்றால், உரையாடல் வழியாக மட்டுமே, நாம், பிறரையும், அவர்களின் தேவைகளையும், புரிந்துகொள்ளவும், சமுதாயத்தின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து உழைக்கவும், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிக்கவும், உண்மையிலேயே நம்மால் இயலும். மதங்களுக்கு இடையே இடம்பெறும் உரையாடல், அமைதியும், ஒருமைப்பாடும் நிறைந்த உலகை அமைப்பதற்கு, உண்மையான பங்களிப்பை அளிக்க உதவுகின்றது. நம் ஒவ்வொருவரிலும், கடவுள் நன்மைத்தனம் என்ற விதையை வைத்துள்ளார். அதை, தம் படைப்பின் பணியில் பயன்படுத்துமாறு, நம்மை அவர் கேட்கிறார். உரையாடல், ஒருவர் ஒருவரை ஏற்றல் மற்றும் சகோதரத்துவ ஒத்துழைப்பு வழியாக, கடவுளின் இரக்கம்நிறை அன்பு, நம் உலகில், மேலும் மேலும் தெளிவாக விளங்கச் செய்வோமாக

இவ்வாறு, இச்சனிக்கிழமை யூபிலி மறைக்கல்வியுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஒரு இலட்சம் திருப்பயணிகளிடம், இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அருளின் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக அமையட்டும் என வாழ்த்தினார். அக்டோபர் 23, இஞ்ஞாயிறன்று உலக மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுவதை நினைவுபடுத்தி, மறைப்பணித்தளங்களில் திருஅவையின் நற்செய்திப் பணிகளுக்கு, செபம் மற்றும் பிற உதவிகள் புரியுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அக்டோபர் 22, இச்சனிக்கிழமை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் திருவிழா. அவரின் விசுவாசச் சான்று வாழ்வையும், போதனைகளையும் பின்பற்றுமாறு, சிறப்பான விதத்தில், இளையோருக்கு விண்ணப்பித்தார். மேலும், இந்த யூபிலி மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்குச் சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று, சரியாக, 38 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த வளாகத்தில், அஞ்சாதீர்கள்..., உங்கள் கதவுகளை கிறிஸ்துவுக்கு அகலத் திறங்கள் என, உலகின் அனைத்து மக்களுக்கும் ஒலித்த குரலைக் கேட்டீர்கள். இவை, உங்கள் திருத்தந்தையாகிய, புனித 2ம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகள். உங்களின் மனதிலும், இதயங்களிலும், இத்திருத்தந்தையின் வார்த்தைகளை ஒலிக்க விடுங்கள் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நாடுகளின் பயணிகளுக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.