2016-10-22 13:47:00

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம் அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின் உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண், அந்த உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின் உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர், அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர் அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப் பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன் இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.

புனிதம் நிறைந்த ஆலயத்தில், இறைவனுக்கு முன், அன்னை மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், ஒருவர் தன்னையே ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, ஓர் உவமை வழியே கூறியுள்ளார். தன் நேரிய, புண்ணியம் மிகுந்த வாழ்வை இறைவனுக்கு முன் பறைசாற்ற கோவிலுக்குச் சென்ற ஒரு பரிசேயரை, இயேசு, இன்றைய நற்செய்தியில், நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இரு உவமைகள், சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி வாசகங்களாக அமைந்துள்ளன. "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று, இன்றைய உவமையை, இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தாழ்ச்சி என்ற உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே, இயேசு, இந்த உவமைச் சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.

சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).

அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள இவ்விரு உவமைகளில், இயேசு பயன்படுத்தியிருக்கும் கதைக்களம், நம் கவனத்தை ஈர்க்கிறது. மனிதக் கண்ணோட்டத்தின்படி, மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு கோவிலைப் பயன்படுத்தவில்லை. தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், கைம்பெண் ஒருவர், நேர்மையற்ற நடுவரை, எல்லா இடங்களிலும் தொடர்ந்தார் என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண், கட்டாயம் இறைவனிடமும் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடியே சென்றிருப்பார். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல, கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை நம்பிக்கையற்ற ஒருவரின் வீட்டு வாசல் என்று, எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார். தற்பெருமை தாராளமாக வலம்வரும் அறிஞர்கள் அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.

உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம் உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலும் சுயவிளம்பர அரங்கமாக மாறும். அங்கு நம்மை நாமே ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர், இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று, மக்கள் முடிவு கட்டியிருப்பர். பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்காக தன் சொந்த மக்களிடமே வரி வசூல்செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இறைவன் முன்னிலையில், பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு சாபமும் கிடைத்திருக்கும் என்ற மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் எண்ணங்களை, தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும் தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக, அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன: பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக் கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'கடவுளே' என்ற அந்த முதல் வார்த்தைக்குப் பிறகு, பரிசேயர் சொன்ன மீதி 26 வார்த்தைகளில், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப் பேசிய வார்த்தைகளே (16) அதிகம். வரிதண்டுபவரோ தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப அவர் மேற்கொண்ட முயற்சி. தன்னுடன் சேர்ந்து, அந்தக் கோவிலுக்கு வந்துவிட்ட வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட, தான், கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும் உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி, பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்: “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக்கா 18: 14)

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. "தான் தாழ்ச்சி உள்ளவர் என்று ஒருவர் நினைக்கும் அந்த நொடியில், இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான் தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்கமுடியாது." என்று, ஓர் அறிஞர், தன் பெயரைக் குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.

பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது. கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர், Mere Christianity – குறைந்த அளவு கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:

"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.

“ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. ‘என்னிடம் ஒன்று உள்ளது’ என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம்’ என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை."

இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். “தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக் காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த திருத்தூதர் பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் பணிவைப் பற்றிய சிந்தனைகளுக்கு முத்தாய்ப்பாக அமையட்டும்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10

கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

இஞ்ஞாயிறை மறைபரப்பு ஞாயிறென்று கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது. Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை அப்படியே மொழி பெயர்த்தால், 'அனுப்பப்படும் ஞாயிறு' என்று சொல்லலாம். அனுப்பப்படுதல் என்பது அழகான ஓர் எண்ணம்.

"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. 'இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்பதே அச்செய்தி."

இதைச் சொன்னவர் இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். ஒரு பரிசாக அனுப்பப்பட்டுள்ளோம். உலக வரலாற்றில், மனித வரலாற்றில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஓர் இடம் உண்டு. நாம் பிறந்ததற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உண்டு. நமக்கேனக் குறிக்கப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தக் குறிக்கோளை வேறு ஒருவராலும் நிறைவேற்ற முடியாது.

பணிவைப் பற்றி சிந்திக்கும் இந்த ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை மறைபரப்பு ஞாயிறு அல்லது, அனுப்பப்படும் ஞாயிறைக் கொண்டாடுவது, பொருத்தமாக உள்ளது. உண்மை இறைவனை அறிவிக்க பல கோடி உன்னத உள்ளங்கள் உலகெங்கும் சென்றனர் என்பதை, பல நூற்றாண்டுகளாக, மறைபரப்பு ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி வந்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியை பணிவான உள்ளத்துடன் சுமந்து சென்று, அனைவரோடும் பகிர்ந்துகொள்ள உலகெங்கும் செல்வதற்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்கத் தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இறைவன் வரம் தரவேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.