2016-10-22 15:25:00

பெனினுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே ஒப்பந்தம்


அக்.22,2016. பெனின் நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை, தனது மறைப்பணியை அதிகாரப்பூர்வமாக ஆற்றுவதற்கு வாய்ப்பளிப்பதை உறுதிசெய்யும் ஒப்பந்தம் ஒன்று, அந்நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான பெனினின் பெரிய நகரமான Cotonouவிலுள்ள, வெளியுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகத்தில், இவ்வெள்ளியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

திருப்பீடத்தின் சார்பில், பெனின் நாட்டுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Brian Udaigwe, பெனின் சார்பில், வெளியுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் Aurélien Agbenonci ஆகிய இருவரும் இதில் கையெழுத்திட்டனர்.

கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரிகள் மற்றும் அதன் நிறுவனங்கள், தனித்துவத்துடன், சட்டமுறைப்படி செயல்படுவதற்கு, இந்த ஒப்பந்தம் வழியமைக்கிறது. 

மேலும், மனிதரின் நன்னெறி, ஆன்மீக மற்றும் பொருளாதார நன்மைக்குச் செயல்படவும், பொதுநலனை ஊக்குவிக்கவும், அரசும், திருஅவையும், இணைந்து செயல்படவும், இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

1960ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாளன்று பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்த பெனின் நாட்டில், 42.8 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். கத்தோலிக்கர் 27.1 விழுக்காடாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.