2016-10-22 15:35:00

இலங்கை : சிறுபான்மையினர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்


அக்.22,2016. இலங்கையில், சிறுபான்மையினர் உரிமைகள் மதிக்கப்படுவதை, தெளிவான நடவடிக்கைகள் வழியாக, அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று, சிறுபான்மையினர்க்கான, ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ஒருவர், விண்ணப்பித்துள்ளார்.

நீண்ட காலமாக, கடும் விளைவுகளை ஏற்படுத்திய போருக்குப் பின்னர், அமைதியான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, புரிந்துகொள்ளத்தக்க, நன்றாகத் திட்டமிடப்பட்ட மற்றும் எல்லாரையும் உண்மையாகவே ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்று, இலங்கைக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ஐ.நா. பிரதிநிதி Rita Izsák-Ndiaye அவர்கள், கூறியுள்ளார்.

இலங்கையில், ஒப்புரவு, குணப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும், இவற்றை ஒரே இரவுக்குள் செய்வது இயலாத காரியம் என்றாலும், இலங்கை அரசு, இதை அவசர, முக்கியமான மற்றும் திட்டவட்டமான செயல்கள் வழியாக வெளிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார், Izsák-Ndiaye. மேலும், இவர், 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழர் பகுதியில், அமைதி நடவடிக்கைகளில் அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறித்து, மக்கள் கடும் அவநம்பிக்கையிலும், அதிருப்தியிலும் உள்ளனர் என்று, பிரிட்டனிலுள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது.

காணாமல்போன நபர்கள், ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பியளித்தல், பாதுகாப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், இராணுவத்தை திரும்பப் பெறுதல் போன்றவை, மிகவும் அவசியமானவை என்றும் அக்குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.