2016-10-22 13:32:00

இது இரக்கத்தின் காலம் - மமதையில் பிறந்த மடமை


இஸ்லாமிய அறிஞர் நஸ்ருதீன் ஒருநாள் தொழுகைக் கூடத்தில் வேண்டிக் கொண்டிருந்தபோது, இவ்வுலகில் தான் எவ்வளவு சிறியவன் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. அவர் உடனே தரையில் விழுந்து, கடவுளிடம், "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார்.

அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரும் செல்வந்தர் அந்நேரம் தொழுகைக் கூடத்தில் இருந்தார். அவர் எப்போதும் அடுத்தவர்களின் பார்வையில் உயர்ந்தவராகத் தெரியும்படி வாழ்ந்து வந்தவர். நஸ்ருதீன் உரத்தக் குரலில் சொல்லிய வார்த்தைகள் அவரது காதில் விழவே, அவர் சுற்றிலும் பார்த்தார். அங்கிருந்தோர் கவனமெல்லாம் நஸ்ருதீன் மீது திரும்பியிருந்ததைக் கண்ட அவர், உடனே விரைந்து சென்று நஸ்ருதீன் அருகில் அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கக் கத்தினார்.

அந்நேரம், தொழுகைக் கூடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த ஓர் ஏழைப் பணியாளரும் நஸ்ருதீன் அருகே அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கச் சொன்னார்.  இதைக் கண்ட செல்வந்தர், நஸ்ருதீனைத் தன் முழங்கையால் இடித்து, "'நான் ஒன்றுமில்லாதவன்' என்று சொல்பவர் யார் என்று பாருங்கள். இதை யார் சொல்வது என்ற வரைமுறையே இல்லாமல் போயிற்று" என்றார்.

இறைவனின் இரக்கத்தை வேண்டுவதிலும் ஏற்றத் தாழ்வுகளைப் புகுத்துவது, மமதையில் பிறந்த மடமை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.