2016-10-21 15:20:00

இளையோருக்குப் பயிற்சியளிப்பது, வருங்காலத்தில் முதலீடு


அக்.21,2016. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் நிறுவனத்தின் 250 உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்தின், கல்வி, கலாச்சாரம், மத மற்றும் பிறரன்புப் பணிகளை ஊக்குவித்தார்.

இளையோருக்குப் பயிற்சியளிப்பது, வருங்காலத்தில் முதலீடு செய்வதாகும் என்றும், இளையோரின் எதிர்காலம் திருடப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

நிறைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு, இறை இரக்கத்தின் மகிமையைச் சிந்தித்து தியானிக்க நம்மைத் தூண்டியுள்ளது என்றும், உண்மையான செல்வம், நம்மை அடிமைகளாக்கும் பணம் அல்ல, ஆனால், நமக்கு விடுதலையளிக்கும் இறையன்பே என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்கள் திருத்தந்தை 2ம் ஜான் பால், பவுஸ்தீனா கொவால்ஸ்கா ஆகிய இரு இறை இரக்கத்தின் திருத்தூதர்களை, போலந்து மண் கொண்டிருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இவ்விரு தூயவர்களும், இந்நிறுவனத்தின் தாராளப் பணிகளுக்குத் தொடர்ந்து தூண்டுகோல்களாக இருப்பார்களாக என்ற தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டை முன்னிட்டு, இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.